எதிர்க்கட்சிகளின் பெங்களூரு கூட்டம் Vs பாஜகவின் டெல்லி கூட்டம்: 2024 தேர்தல் பலம் - ஒரு முன்னோட்டம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பெங்களூருவில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் இன்றும், நாளையும் (ஜூலை 17, 18) நடைபெறுகிறது. அதேபோல் டெல்லியில் நாளை (ஜூலை 18) பாஜக தலைமையிலான கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த இரு கூட்டங்களும் வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்கான தத்தம் பலங்களை நிரூபிக்க இரண்டு கட்சிகளும் மேற்கொள்ளும் 'ஷோகேஸ்' முயற்சி என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பெங்களூருவில் இன்று தொடங்கியுள்ள எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் 26 கட்சிகள் கலந்து கொள்கின்றன. சரத் பவார் இன்று பங்கேற்காத நிலையில், நாளை அவர் கலந்து கொள்வார் என காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார். ‘யுனைடட் வீ ஸ்டாண்ட்’ என்ற முழக்கத்துடன் நடைபெறும் இந்தக் கூட்டத்துக்கு வரும் தலைவர்களை கர்நாடக துணை முதல்வரும், மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவகுமார் தனித்தனியாக வரவேற்றார்.

காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, திமுக, ஆம் ஆத்மி, இந்திய கம்யூனிஸ்ட், சிபிஐ (எம்-எல்), சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். 2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் வியூகம் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படுகிறது. இந்தக் கூட்டம் பாஜகவுக்கு படபடப்பை ஏற்படுத்தியுள்ளதாலேயே டெல்லியில் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை முகம் தெரியாத கட்சிகளையெல்லாம் கூட்டி பிரதமர் மோடி நடத்த இருப்பதாக எள்ளி நகையாடியுள்ளார் கார்கே. அதற்கு பாஜக மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் இது அதிகாரப்பசி கொண்ட சந்தர்ப்பவாதிகளின் கூட்டணி என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, நாளை நடைபெறும் பாஜக கூட்டத்தில் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் பிரிவு, லோக் ஜனசக்தி கட்சி உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொள்கின்றனர்.

எதிர்க்கட்சிகள் தங்களின் பலத்தை நிரூபிக்க பெங்களூருவில் கூடியுள்ளது. பாஜகவும் பலத்தைக் காட்டவே கூடுகிறது. இந்த எண் பலம் எல்லாம் வரவிருக்கும் தேர்தலில் என்ன பலனை கொடுக்கும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க இயலும்.

எண் விளையாட்டு: காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, திமுக, ஆம் ஆத்மி, இந்திய கம்யூனிஸ்ட், சிபிஐ (எம்-எல்), தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 24 கட்சிகளுடன் சிவ சேனா உத்தவ் பிரிவு, என்சிபி சரத் பவார் பிரிவும் கலந்து கொள்கின்றன. கடந்த மக்களவை தேர்தலில் சிவசேனா 18 இடங்களை வென்றது. ஆனால், அதில் பெரும்பாலானோர் இப்போது ஏக்நாத் ஆதரவாளர்களாக உள்ளனர். என்சிபி 5 இடங்களைக் கைப்பற்றியது. அங்கே யார் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது இன்னமும் பூடகமான விஷயமாகவே உள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் உள்பட இந்த 24 கட்சிகளும் கைப்பற்றிய தொகுதிகள் 124. பெற்ற வாக்குகள் 34.47 சதவீதம்.

2019-ல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் கைப்பற்றிய இடம் 317. பாஜக மட்டுமே 303 இடங்களைக் கைப்பற்றியது. வாக்கு விகிதம் அடிப்படையில் இந்தக் கூட்டணி பெற்ற வாக்குகள் 40.81 சதவீதம் ஆகும்.

ஊசலாட்டத்தில்... - ஒடிசாவின் பிஜு ஜனதா தளம், ஆந்திர மாநிலத்தின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இன்னும் தங்களின் நிலைப்பாட்டை தீர்மானம் செய்யாமல் இருக்கின்றன. அதேபோல் மதச்சார்பற்ற ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி, ஷிரோன்மனி அகாலி தளம், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் அழுத்தமான மவுனத்தைக் கடைபிடிக்கின்றன. முன்னர் இந்த 6 கட்சிகளுமே புதிய நாடாளுமன்றத்தை எழுப்பும் விவகாரத்தில் பாஜகவை ஆதரித்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கட்சிகளுக்கு மொத்தமாக 50 மக்களவை எம்.பி.க்கள் பலம் உள்ளது.

கடந்த தேர்தலில் ரிப்போர்ட் கார்டும், கட்சிகளின் மனநிலையும் இவ்வாறாக இருக்க, இது தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கூட்டங்களில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அடுத்து வரும் மாதங்கள் தான் தீர்மானிக்கும்.

காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டத்துக்கு வந்திருக்கும் மாநிலக் கட்சிகள் பல அந்தந்த மாநில தேர்தல் களத்தில் காங்கிரஸுக்கு எதிர்க்கட்சிதான். இருந்தாலும் பாஜகவை வீழ்த்தும் ஒற்றை இலக்கு மட்டுமே இவர்களை ஒன்றிணைத்துள்ளதால் அதன் ஸ்திரத்தன்மையை அரசியல் நோக்கர்கள் கேள்விக்குள்ளாக்குகின்றனர்.

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஏற்படுத்தும் தாக்கம், யுபிஏ-வின் தலைமையை ஏற்றுக் கொள்ள கட்சிகள் காட்டும் ஆர்வம், தேர்தல் உத்தி வகுப்பாளர்கள் சேர்த்தும் உடைத்தும் விடும் கணக்குகள் என அனைத்தும் சேர்ந்தே கூட்டணிக் கணக்குகளை நிர்ணயிக்கும்.

இப்படியிருக்க, இந்த இரண்டு நாள் கூட்டங்கள், வரும் தேர்தலில் பாஜக vs காங்கிரஸ் மோதலுக்கான முன்னோட்டமாக அல்லாமல் முன்னுரையாக மட்டும் நிற்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE