Opposition Meet | “அதிகாரப் பசிகொண்ட சந்தர்ப்பவாதிகளின் ஆலோசனைக் கூட்டம்” - பாஜக விமர்சனம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பெங்களூருவில் நடப்பது அதிகாரப் பசியில் இருக்கும் சந்தர்ப்பவாதிகளின் ஆலோசனைக் கூட்டம் என்று பாஜக விமர்சித்துள்ளது.

வரும் 2024-ம் ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில், ஆளும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள திட்டமிட்டுள்ளன. இதன்படி எதிர்க்கட்சி தலைவர்களின் முதல் ஆலோசனை கூட்டம், பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் ஏற்பாட்டில், கடந்த ஜூன் 23-ம் தேதி பாட்னாவில் நடைபெற்றது. இதில் திமுக உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கர்நாடக காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான டி.கே.சிவகுமார் செய்து வருகிறார். இந்தக் கூட்டத்தில் 24-க்கும் மேற்பட்ட கட்சிகள் கலந்து கொள்கின்றன.

இந்தக் கூட்டம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரவி சங்கர் பிரசாத் பேசுகையில், "பெங்களூருவில் நடைபெறும் பாஜக கூட்டம் அதிகாரப் பசியில் இருக்கும் சந்தர்ப்பவாதிகளின் ஆலோசனைக் கூட்டம். டெல்லியில் மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அங்கே இருந்து மக்களுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்ளாமல் பெங்களூரு செல்கிறார் அரவிந்த் கேஜ்ரிவால். இதுபற்றியெல்லாம் காங்கிரஸ் வாய் திறக்கவே இல்லை. அதேபோல் மேற்குவங்கத்தில் பஞ்சாயத்து தேர்தலின்போது நடந்த வன்முறை பற்றி காங்கிரஸ் மவுனம் காக்கிறது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அரசியல் கட்சிகளுக்கு என்று ஒருமித்த கொள்கை ஏதும் இல்லை. ஒன்றைக் கொடுத்து ஒரு ஆதாயத்தைப் பெற்றுக் கொள்வதே அவர்களின் கொள்கை. ஆகையால் இது மக்கள் நலனுக்கான ஆலோசனைக் கூட்டம் இல்லை அதிகாரப்பசி உள்ள சந்தர்ப்பவாதிகளின் கூட்டம்" என்றார்.

முன்னதாக, எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தால் பாஜகவுக்கு படபடப்பு ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்திருந்தார். | வாசிக்க > “எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தால் பாஜகவுக்கு படபடப்பு” - கார்கே

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE