“டெல்லி மக்களுக்காக அவரச சட்டத்தை முழுமையாக எதிர்ப்போம்” - கார்கேவுக்கு நன்றி சொன்ன கேஜ்ரிவால்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லியில் அரசு அதிகாரிகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பான மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக டெல்லி மக்களுடன் நின்றதற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார்.

2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை ஒன்றிணைந்து எதிர்கொள்ளுவது குறித்து ஆலோசிக்க 20-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் பெங்களூருவில் கூடும் நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "டெல்லி மக்களுடன் நின்றதற்கு நன்றி கார்கே ஜி. இந்த அவசர சட்டம் இந்தியாவுக்கு எதிரானது, நாட்டுக்கு எதிரானது. இதனை நாம் முழுமையாக எதிர்க்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மத்திய அரசின் டெல்லி அவசர சட்டம் தொடர்பான காங்கிரஸின் நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கார்கே, "இது ஒரு தனிமனிதனைப் பற்றிய விஷயம் இல்லை. ஜனநாயகத்துக்கும் அரசியல் சட்டத்துக்கும் ஆபத்து ஏற்படும்போது ஜனநாயகத்தையும், சட்டத்தையும் காப்பாற்ற ஒன்றிணைந்து போராடுவது நமது கடமை. நாட்டைவிட ஒரு தனிமனிதன் முக்கியமானவன் இல்லை" என்று தெரிவித்தார்.

மேலும், தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்துக்காக பிரதமர் மோடியை விமர்சித்த கார்கே, "அவர் (மோடி) ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளை விட வலிமையானவர் என்றால், அவர்கள் அனைவருக்கும் எதிர்க்க மோடியே போதுமானவர் என்றால், ஏன் 30 கட்சிகளின் ஆதரவை திரட்ட அழைப்பு விடுக்க வேண்டும்? அந்தக் கட்சிகளின் பெயர்களை வெளியிடட்டும். அவை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளா? எங்களுடன் இருக்கும் மக்கள் எப்போதும் எங்களுடனேயே இருக்கிறார்கள். நாங்கள் என்ன செய்கிறோம் என்பது குறித்து அவர்கள் (பாஜக) குழப்பமடைந்துள்ளனர். அதனால், தங்களின் வலிமையைக் காட்ட ஆதரவுக் கட்சிகளின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்" என்றார்.

இன்றும் (திங்கள்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இந்நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் கூட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் 30 கட்சிகள் கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, ஆம் ஆத்மி கட்சியின் உச்சபட்ட முடிவெடுக்கும் அமைப்பான அரசியல் விவகாரக் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டில் நடந்தது. அந்தக் கூட்டத்துக்குப் பின் பேசிய அக்கட்சியின் மாநிலங்களவை எம்.பி.,ராகவ் சதா கூறுகையில், "ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழு நீண்ட விவாதம் நடத்தியது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலின் வேண்டுகோளுக்கிணங்க திரிணமூல் காங்கிரஸ் கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், திராவிட முன்னேற்ற கழகம், பாரதிய ராஷ்ட்ரீய சமிதி, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, சிவசேனா (உத்தவ் அணி) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜார்க்கண்ட முக்தி மோர்ச்சா கட்சிகள் டெல்லியின் கருப்புச் சட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்கவும், நாடாளுமன்றத்தில் அந்த மசோதா தாக்கல் செய்யப்படும்போது, அதை தோற்கடிக்கவும் சம்மதம் தெரிவித்துள்ளன.

இந்த வரிசையில் காங்கிரஸ் கட்சியும் டெல்லி அவசர சட்டத்துக்கு எதிரான தனது நிலைப்பாட்டை இன்று தெளிவுபடுத்தியுள்ளது. அவசர சட்டத்தை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளது. நாங்கள் காங்கிரஸ் கட்சியின் அறிவிப்பினை வரவேற்கிறோம்" என்று தெரிவித்தார். காங்கிரஸின் இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து, பெங்களூருவில் இன்று (திங்கள்கிழமை) தொடங்கும் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலேசானைக் கூட்டத்தில் கலந்துகொள்ள இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE