நிவாரணம் கிடைக்கவில்லை என்றால் 8 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது: மேல்முறையீட்டு மனுவில் ராகுல் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மோடி குறித்த அவதூறு வழக்கில் குஜராத் சூரத் நீதிமன்றம் அளித்த 2 ஆண்டு தண்டனை சரியானதே என உயர் நீதிமன்றம் கடந்த 7-ம் தேதி தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ராகுல் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில் ராகுலின் வழக்கறிஞர் பிரசன்னா கூறியிருப்பதாவது:

குஜராத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக நிவாரணம் கிடைக்கவில்லை என்றால், ராகுல் 8 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 8(3)-வது பிரிவின் கீழ், ஒருவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டால், சிறை தண்டனை காலத்திலும், அதற்கு பிறகு 6 ஆண்டு காலத்துக்கும் தேர்தலில் போட்டியிட தகுதியில்லை. குஜராத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ராகுல் தடை பெறக் கூடாது என்பதை உறுதி செய்ய, வழக்கு தொடர்ந்த பர்னேஸ் மோடியின் வழக்கறிஞர் சுதீர் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அது தீவிரமான கோரிக்கையும் அல்ல. ஒழுங்கீனத்துக்கு கடும் தண்டனை அளிக்கக் கூடிய பிரிவிலும் வரவில்லை.

தேர்தல் பிரச்சாரத்தில் கூறப்பட்ட அவதூறு வார்த்தைகள், அரசியல் எதிரியை பற்றி குறிப்பிட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது எந்த சமுதாயத்தினருக்கும் எதிரான கருத்து அல்ல. அவதூறு அடிப்படையில் மக்களவை பிரதிநிதி ஒருவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டதன் மூலம் அந்ததொகுதி மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிப்பது தடுக்கப்பட்டுவிட்டது. தண்டனைக்கு தடை விதிக்காவிட்டால், வயநாடுதொகுதி மக்கள் பல மாதங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் பாதிப்பை சந்திப்பர். தேர்தல்பிரச்சாரத்தில் பெயர் குறிப்பிடப்பட்ட 3 நபர்கள் புகார் அளிக்கவும் இல்லை வழக்கு தொடுக்கவும் இல்லை. மோடி என்ற துணை பெயருக்கு அவமதிப்பு செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார் அளித்தவரும் மோத் வனிக சமாஜ் அமைப்பில் இருந்து வந்தவர் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார். இவருக்கும், மோடி சமுதாயத்தினருக்கும் சம்பந்தம் இல்லை. இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE