பாலியல் கொடுமைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்: எடியூரப்பா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கைது

பெங்களூரில் அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார சம்பவங்களை கண்டித்து கர்நாடக முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்பினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரில் கடந்த சில நாட்களில் 6 வயது பள்ளிச் சிறுமி, கல்லூரி மாணவி, கன்னியாஸ்திரி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பெங்களூரில் பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது.

சுதந்திர பூங்கா அருகே பாஜக மாநில தலைவர் பிரஹலாத் ஜோஷி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்வர்கள் ஆர்.அசோக், ஈஸ்வரப்பா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அங்கு குவிந்திருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் கர்நாடக அரசுக்கு எதிராகவும், உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜுக்கு எதிராகவும் ஆவேசமாக முழக்கம் எழுப்பினர். பின்னர் கர்நாடக சட்டசபை கட்டிடத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.அவர்களை தடுக்க முயன்ற காவலர்களையும் மீறி சென்றதால் எடியுரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்ட அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

மாணவர்கள் போராட்டம்

பாலியல் பலாத்கார சம்பவங்களைக் கண்டித்து மகளிர் அமைப்புகளும், மாணவர் அமைப்புகளும், இளைஞர் அமைப்புகளும் பெங்களூரில் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE