“ஏழைகளின் நலனுக்காகவே வந்தேன்”: பாஜக கூட்டணியில் இணைந்த பின் ஓம் பிரகாஷ் ராஜ்பர் பேட்டி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: 2024ஆம் ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி இணைந்துள்ளது.

சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் நேற்று (ஜூலை 15) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இதனையடுத்து இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ஓம் பிரகாஷ் ராஜ்பர், 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதாக அறிவித்தார். மேலும் ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் நலனை கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “ஏழைகளின் நலனே பிரதமர் மோடியின் லட்சியமாகவும் இருக்கிறது. பிரதமர் மோடி, உள்துறை அமித்ஷா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். டெல்லியில் வரும் 18ஆம் தேதி நடக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் நாங்கள் கலந்து கொள்வோம். எனக்கு அமைச்சர் பதவி முக்கியம் அல்ல. எதிர்கட்சி தலைவர் இடையே ஈகோ பிரச்சினைகள் உள்ளன. ஒவ்வொருவரும் தன்னை பெரியவர்களாக நினைத்துக் கொள்கின்றனர். சிறிய கட்சிகளை ஒருங்கிணைப்பதன் மூலம் அதிகாரத்தை கைப்பற்றுவது எப்படி என்று இந்த கட்சிகள் பாஜகவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

ஓம் பிரகாஷ் ராஜ்பர் தங்கள் கூட்டணிக்கு வந்தது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “என்டிஏ குடும்பத்துக்கு ஓம் பிரகாஷ் ராஜ்பரை வரவேற்கிறேன். அவரது வருகை உத்தர பிரதேசத்தில் என்டிஏ கூட்டணியை வலுப்படுத்தும். பிரதமர் மோடியின் தலைமையிலான என்டிஏ கூட்டணி ஏழைகளின் நலனுக்காக எடுக்கும் முயற்சிகள் இன்னும் வலுப்பெறும்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE