18 டன் தக்காளிகளுடன் சாலையில் கவிழ்ந்த லாரி: போலீஸ் பாதுகாப்பு கோரிய ஓட்டுநர்

By செய்திப்பிரிவு

அடிலாபாத்: கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் இருந்து டெல்லிக்கு தக்காளி ஏற்றிச் சென்று கொண்டிருந்த லாரி தேசிய நெடுஞ்சாலை எண் 44ல் செல்லும்போது தெலங்கானா மாநிலம் அடிலாபாத் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியில் இருந்த தக்காளிகளின் மதிப்பு ரூ.22 லட்சம்.

தக்காளி லாரி கவிழ்ந்தது அறிந்து மக்கள் கூடிவிட ஓட்டுநர் அக்ரம் உடனடியாக காவல்துறையை நாடி தக்காளிகளுக்கு பாதுகாப்பு கோரினார். சிறிது நேரத்தில் அங்கு போலீஸார் வர அவர்கள் தக்காளிக்கு பாதுகாப்பு அளித்ததோடு காயமடைந்த ஓட்டுநரை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீஸார் கூறுகையில், "லாரியில் 18 டன் தக்காளி இருந்துள்ளது. அதன் மொத்த மதிப்பு ரூ.22 லட்சம். லாரி அடிலாபாத் அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடந்த்போது எதிரே ஒரு இருச்சக்கர வாகனம் வந்தது. அந்த வாகனத்தின் மீது மோதுவதைத் தவிர்க்க லாரி ஓட்டுநர் வாகனத்தை சற்றே திருப்ப முயன்றபோது வாகனம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இருந்த லாரியில் இருந்த 20 சதவீதம் தக்காளிகள் சேதமடைந்துள்ளன. தக்காளி லாரி கவிழ்ந்ததை அறிந்த மக்கள் லாரியைச் சூழ பதற்றமடைந்த ஓட்டுநர் எங்களிடம் பாதுகாப்பு கோரினார்" என்றனர்.

கோலாரில் மொத்தச் சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.110 என்றளவில் விற்கப்படுகிறது. சராசரியாக நாடு முழுவதும் தக்காளி கிலோ ரூ.150க்கு விற்பனை செய்யப்படுகிறது. அடிலாபாத்தில் தக்காளி விலை கிலோ ரூ.100க்கு விற்பனையாகிறது. நாக்பூர் சந்தையில் இருந்து அங்கு தக்காளி வருகிறது. அதனால் விலை சற்று குறைவாக உள்ளது.

தக்காளி லாரி கவிழ்ந்ததும் அதைச் சுற்றி மக்கள் கூடி சேதமடைந்த தக்காளிகளை அள்ளிச் செல்ல ஆர்வம் காட்டியதைப் பார்த்த விவசாயி ரமேஷ், ஒரு காலத்தில் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் நாங்கள் அதனை லாரிகளில் கொண்டு சென்று கீழே கொட்டியிருக்கிறோம் என்று நினைவுகூர்ந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE