7 ஆண்டுக்குப் பிறகு இன்று காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது

By செய்திப்பிரிவு

ஏழு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு காவிரி நதிநீர் நடுவர் மன்றம் இன்று கூடுகிறது.

காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி வழங்கியது. தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களும் பகிர்ந்துகொள்ள வேண்டிய நீர் அளவை நடுவர் மன்றம் நிர்ணயித்து உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பில் விளக்கம் கோரி நான்கு மாநிலங்கள் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து, கர்நாடகம் சார்பில் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்த வழக்கும் நிலுவையில் உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவை யில் உள்ளதால் இதுகுறித்து மாநிலங்கள் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரிக்க முடியாது என்று நடுவர் மன்றம் மறுத்துவிட்டது. கடைசியாக கடந்த 2007-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி நடுவர் மன்றம் கூடியது.

நடுவர் மன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை எதுவும் விதிக்காததால், நிலுவையில் உள்ள மனுக்களை விசாரிக்கலாம் என்று தமிழகம் சார்பில் கோரப்பட்டது. நடுவர் மன்ற தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி பி.எஸ்.சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் ஏழு ஆண்டுகளுக்குப் பின் செவ்வாய்க் கிழமை காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது.

நடுவர் மன்றத் தீர்ப்பின் அடிப் படையில் எதிர்காலத்தில் எடுக்கப் பட வேண்டிய நடவடிக்கைகள், உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் தற்போதைய நிலை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக் கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE