‘தாராவி திட்டமும் அதானியும்...’ - தேவேந்திர பட்னாவிஸின் ‘கடைசி’ செயல் மீது காங்கிரஸ் கடும் தாக்கு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: “மகாராஷ்டிரா அரசின் வீட்டு வசதித் துறை அமைச்சராக தேவேந்திர பட்னாவிஸின் கடைசி செயல், மாநில பாஜக அரசுகளை பிரதமர் மோடி தனது கூட்டாளிகளின் ஏடிஎம் இயந்திரங்களாக மாற்றி வைத்திருப்பற்கு உதாரணம்” என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில், "வீட்டு வசதித் துறையை முறையாக வெள்ளிக்கிழமை ஒப்படைப்பதற்கு முன்பு அத்துறை அமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் தனது கடைசி செயலாக, மும்பையின் மையப்பகுதியில் உள்ள 600 ஏக்கரை உள்ளடக்கிய ரூ.5,069 கோடி மதிப்புள்ள தாராவி மறுசீரமைப்பு திட்டத்தை அதானி குழுமத்துக்கு மாற்ற ஒப்புதல் அளித்துள்ளார்.

சில பிரச்சினைகள் காரணமாக முந்தைய ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட நிலையில், பிரதமர் மோடியின் நண்பர் மட்டுமே ஒப்பந்தத்தில் வெற்றி பெறும் வகையில் ஷிண்டே - பட்னாவிஸ் அரசு ஒப்பந்த விதிகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அதில், முந்தைய ஒப்பந்ததாரரை பின்னுக்குத் தள்ளி அதானி குழுமம் வெற்றி பெறும் வகையில் குறைந்தபட்ச நிகர மதிப்புத் தொகையை ரூ.10,000 கோடியில் இருந்து ரூ.20,000 கோடியாக உயர்த்தியது; அதனையும் பணமே இல்லாத அதானி குழுமம் தவணை முறையில் செலுத்துவதற்கு வழிவகை செய்ததும் அடங்கும்.

பிரதமர் மோடி தனது மாநில அரசுகளை அவரது நெருங்கிய கூட்டாளிகளின் ஏடிஎம் இயந்திரங்களாக மாற்றி வைத்திருப்பதற்கு இது மற்றுமொரு உதாரணம். மும்பையின் குடிசைவாசிகளின் நிலமும் வாழ்வாதாரமும் கூட ‘மோதானி ஊழலில்’ இருந்து காப்பாற்றப்பட முடியாது போலும்" என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) எம்.பி., பிரியங்க சதுர்வேதி தனது ட்விட்டர் பதிவில், "மகாராஷ்டிராவின் வீட்டு வசதித் துறை அமைச்சகத்தை கவனித்து வந்த துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தனது பொறுப்பை அவரது சகா அதுல் சேவிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைப்பதற்கு முன்பாக அரசின் தீர்மானத்தை நிறைவேற்றினார். தொழிலதிபர்களின் இந்த நவீன யுக அடிமைகளை சந்தியுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் தனது ஆதரவு குழுவுடன் மகாராஷ்டிரா அரசில் இணைந்ததைத் தொடர்ந்து அம்மாநில அமைச்சரவையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால், துணை முதல்வர்களில் ஒருவரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ், தான் கவனித்து வந்த வீட்டுவசதித் துறை அமைச்சர் பொறுப்பை சகாவிடம் ஒப்படைப்பதற்கு முன்பு அமைச்சராக கடைசி நாளில் மாநில அரசுடன் இணைந்து அதானி குழுமம் செயல்படுத்த இருக்கும் தாராவி மறுசீரமைப்பு திட்டத்துக்கு வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE