கருணாநிதி, ஜெயலலிதா வடமொழிப் பெயர்கள்தானே? - சுப்பிரமணியன் சுவாமி கேள்வி

பள்ளிகளில் 'சமஸ்கிருத வாரம்' அனுசரிக்கப்படுவதை கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் எதிர்த்தால் அவர்கள் பெயரை மாற்றி வைத்துக் கொள்ள வேண்டியதுதானே? என்று சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சமூக வலைத்தளத்தில் நடந்த விவாதம் ஒன்றில் அவர் பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

"சமஸ்கிருதம் எதிர்காலத்தின் மொழி. நாசாவே சமஸ்கிருத மொழிதான் கணினிக்கு இலகுவானது என்பதை அடையாளம் கண்டு கொண்டுள்ளது.

இன்று சமஸ்கிருத வாரம் என்பதை கருணாநிதியும், ஜெயலலிதாவும் எதிர்க்கின்றனர். அப்படியென்றால் பெயரை மாற்றிக் கொள்ளட்டும். ஜெயலலிதா என்பது சமஸ்கிருதப் பெயர். கருணாநிதி என்பதும் சமஸ்கிருதப் பெயர்” என்று கூறியுள்ளார் சுவாமி.

மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த அவர், மாநில நலன்கள் தேச நலன்களைக் கடந்து செல்லக்கூடாது என்றார்.

“நான் இதனை தமிழ்நாட்டை வைத்தே கூறினேன், தமிழர்களின் நலன் தேச நலன்களைத் தாண்டிச் செல்லக்கூடாது. முந்தைய ஆட்சியின் முட்டாள் தனத்தினால் இலங்கையில் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் கை ஒங்கியுள்ளது” என்றார்.

மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த அவர், "ராமர் கோவில் விவகாரத்தில் முஸ்லிம் சமுதாயத்தினருடன் நிச்சயம் பேச்சு வார்த்தைகள் நடத்துவோம். இஸ்லாம் இறையியல்வாதிகளின் உதவியுடன், மதுரா, அயோத்தி, மற்றும் காசியில் இருக்கும் 3 கட்டுமானங்களை ஏற்க பேச்சு வார்த்தைகள் நடத்துவோம், மசூதிக்கு வேறு இடம் ஒதுக்கிக் கட்டித் தர ஏற்பாடுகள் செய்வோம்” என்றார் அவர்.

அவர் மேலும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில், "பாஜக-வில் ஒரு குடும்பம் என்பது இல்லை. தனிநபர்கள் பாஜகவில் ஒட்டுமொத்த அதிகாரத்தை அடைய முடியாது. நரேந்திர மோடி சமுதாயப் புரட்சியை பிரதிநித்துவம் செய்யும் நபர்” என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE