தக்காளி விற்று ஒரே மாதத்தில் கோடீஸ்வரரான மகாராஷ்டிர விவசாயி

By செய்திப்பிரிவு

புனே: தக்காளி விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்து வரும் சூழலில் மகாராஷ்டிராவில் தக்காளி விற்று ஒரே மாதத்தில் கோடீஸ்வரராகியுள்ளார் ஒரு விவசாயி.

புனே மாவட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயி துக்காராம் பாகோஜி கயாகர். அவருக்குச் சொந்தமாக 18 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. இதில் 12 ஏக்கரில் அவர் தக்காளி விவசாயம் செய்து வருகிறார். அவருடன் அவரது மகன் ஈஸ்வர் கயாகர், மருமகள் சோனாலி ஆகியோர் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திடீரென தக்காளி விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட துக்காராமுக்கு ஜாக்பாட் அடித்தது. அவர் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 13 ஆயிரம் பெட்டிகள் தக்காளி அறுவடை செய்து சந்தைப் படுத்தியுள்ளார். அவருடைய தோட்ட தக்காளிகளுக்கு ஏற்கெனவே உள்ளூர் மற்றும் அக்கம்பக்கத்து கிராமங்களில் வரவேற்பு அதிகம். இந்நிலையில் ஒவ்வொரு பெட்டியையும் அவர் சுமார் ரூ.1000 முதல் ரூ.2400 வரை விற்பனை செய்துள்ளார். இதன் மூலம் அவருக்கு ரூ.1.5 கோடி வருவாய் கிட்டியுள்ளது.

துக்காராமின் மருமகள் சோனாலி தக்காளியைப் பயிரிடுதல், அறுவடை செய்தல், அதனை பெட்டிகளில் அடைத்தல் போன்ற வேலைகளைச் செய்கிறார். அவரது மகன் ஈஸ்வர் விற்பனை, நிதி மேலாண்மை வேலைகளைச் செய்கிறார். கடந்த மூன்று மாதங்களில் தாங்கள் செலுத்திய கடின உழைப்புக்குப் பலன் கிடைத்துள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர். துக்காராம் மட்டுமல்ல புனே மாவட்டத்தின் ஜுன்னார் கிராமத்தைச் சேர்ந்த தக்காளி விவசாயிகள் பலரும் ஒரே மாதத்தில் கோடீஸ்வரராகியுள்ளனர்.

அதேபோல் ஜுன்னார் கிராமத்தைச் சேர்ந்த தக்காளி விவசாயிகள் கூட்டமைப்பு ஒரே மாதத்தில் ரூ.80 கோடிக்கு வர்த்தகம் செய்துள்ளது. இதன்மூலம், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 100 பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. ஜுன்னு வேளாண் உற்பத்தி சந்தையில் முதல் தர தக்காளி 20 கிலோ கொண்ட ஒரு பெட்டி ரூ.2500க்கு விற்பனையாகிறது. சில்லறை வணிகத்தில் கிலோ ரூ.125-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விற்று கோடீஸ்வரரான விவசாயியின் கதை மகாராஷ்டிராவில் மட்டுமல்ல, நாடு முழுவதுமே நடந்து வருகிறது. கர்நாடகாவில் ஒரு விவசாயக் குடும்பம் கடந்த வாரம் கோலார் சந்தையில் 2000 பெட்டி தக்காளி விற்று ரூ.38 லட்சம் லாபத்துடன் திரும்பிய செய்தி வெளியானது கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE