டெல்லி யுபிஎஸ்சி நூலகத்தில் தமிழ் நூல்கள் இல்லை: வினாத்தாள் பணிக்கு வரும் தமிழாசிரியர்கள் தவிப்பு

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: டெல்லியில் உள்ள யுபிஎஸ்சி (மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்) நூலகத்தில் முக்கியத் தமிழ் நூல்கள் இல்லை எனப் புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக, அங்கு வினாத்தாள் பணிக்கு வரும் தமிழாசிரியர்கள் குறிப்புகள் எடுப்பதில் தவிக்கும் நிலை தொடர்கிறது.

தமிழ் உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) தேர்வுகளை நடத்துகிறது. இதற்கான வினாத்தாள்கள் தயாரித்தல், அவற்றை மாற்றி அமைத்தல், விடைத்தாள்களை திருத்துதல் போன்ற பணிகள் டெல்லியில் உள்ள யுபிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இதற்காக, அம்மொழிகளுக்கான பேராசிரியர்கள் நாடு முழுவதிலுமிருந்து அழைக்கப்படுகின்றனர். இவர்கள் யுபிஎஸ்சி வளாகத்தில் தங்கி தங்கள் பணியை செய்கின்றனர். அப்போது அவர்கள் வெளியில் செல்லவும், அவர்களை வெளிநபர்கள் சந்திக்கவும் அனுமதிக்கப்படுவதில்லை.

பேராசிரியர்கள் குறிப்புகளை எடுக்க, யுபிஎஸ்சி நூலகத்தின் நூல்களை பயன்படுத்தலாம். ஆனால், இங்கு திருக்குறள்,சங்க இலக்கியம் உள்ளிட்ட முக்கியமானத் தமிழ் நூல்கள் இல்லை எனக் கூறப்படுகிறது. ஒருசில நூல்கள் மட்டுமே இருப்பதாகவும், இதுகுறித்து யுபிஎஸ்சி நூலகத்தில் கூறியும் பலனில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.

புகாருக்கு பதில் இல்லை: இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் யுபிஎஸ்சி பணிக்குச் சென்று வரும் தமிழ் பேராசிரியர்கள் வட்டாரத்தில் கூறும்போது, “தமிழ் நூல்களை உடன் கொண்டுவர எங்களை அனுமதிப்பதில்லை. நாங்கள் அந்த நூலகத்தில் உள்ள என்சிஇஆர்டி ஆங்கில நூல்களை படித்து தமிழில் புரிந்துகொண்டு வினா, விடைத்தாள் பணியை செய்ய வேண்டியுள்ளது. இதில், ஆங்கிலப் புலமை குறைவாக இருக்கும் தமிழ்ப் பேராசிரியர்கள் தடுமாறுவதும் நிகழ்கிறது. தமிழிலும் குடிமைப்பணி தேர்வு எழுத அனுமதிக்கும் போது அதற்கான நூல்கள் கிடைத்தால் தானே தேர்வாளர்களுக்கு உகந்தவகையில் பணி செய்ய முடியும்? இதுகுறித்து பல வருடங்களாக யுபிஎஸ்சியில் புகார் செய்தும் பலனில்லை” என்றனர்.

நடைமுறை பிரச்சினை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் யுபிஎஸ்சி நூலகர் அமித் பிரகாஷ் குப்தா கூறுகையில், “தமிழாசிரியர்கள் கூறும் புகார் உண்மைதான். இதை சரிசெய்ய நானும் பல வருடங்களாக முயற்சிக்கிறேன். என்சிஇஆர்டி நூல்களை சென்னையில் உள்ள மத்திய அரசின் அலுவலகமான எஸ்சிஇஆர்டி தமிழில் வெளியிடுகிறது. அதை அனுப்பும்படி அவர்களுக்கு எழுதினால், ஆள் அனுப்பிபெற்றுக் கொள்ளும்படி கூறுகின்றனர். டெல்லியிலிருந்து ஆள் அனுப்ப யுபிஎஸ்சி விதிகள் அனுமதிக்கவில்லை. தனியார் நூல் வெளியீட்டாளர்கள் தங்கள் வெளியீடுகளை மட்டும் அனுப்புவதாக தெரிவிக்கின்றனர். இதர வெளியீடுகள் கிடைப்பதும் சிக்கலாக உள்ளது. தேர்வாணையப் பணிக்காக வரும் பேராசிரியர்களும் நூல்களை வாங்கிவர தயங்குகின்றனர். இதுபோன்ற பல நடைமுறை பிரச்சினைகளால் தமிழ் நூல்கள் வாங்க முடியாமல் உள்ளது” என்று தெரிவித்தார்.

மற்ற மொழிகளின் பிரச்சினைகளை அறிந்த அந்தந்த மாநில அரசுகள், யுபிஎஸ்சியிடம் பேசி அந்நூல்கள் தொடர்பான பிரச்சினைகளை தீர்த்து வைக்கத் தொடங்கியுள்ளனர். இது போல் தமிழக அரசும் யுபிஎஸ்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மத்திய, மாநில அரசுகளுக்கான அதிகாரிகளை யுபிஎஸ்சி தேர்வு செய் கிறது. இதன் தேர்வில் வெற்றி பெறும் பட்டதாரிகள் சுமார் 25 வகையான பிரிவுகளில் பணி அமர்த்தப்படுகின்றனர். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த யுபிஎஸ்சி தேர்வில் தமிழுக்கு உள்ள நிலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

13 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்