ராஜஸ்தானில் 1985-ல் வாங்கிய சொத்து வழக்கில் 38 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தில் 1985-ல் வாங்கிய சொத்து மீது தொடரப்பட்ட வழக்கில் 38 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரவி கந்தேல்வால். இவர் 1985-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி, ஜெய்ப்பூர் மெட்டல் எலக்ட்ரிக் கம்பெனியிடமிருந்து ஓர் இடத்தை வாங்கினார். அந்த இடத்தை துலிகா ஸ்டோர்ஸ் என்ற நிறுவனத்தார் 1982-ம் ஆண்டு முதல் 5 ஆண்டு வாடகைக்கு ஏற்கெனவே எடுத்திருந்தனர். அதனால் ஒப்பந்தம் முடிவதற்கு முன்னர் காலி செய்ய முடியாது என்று துலிகா ஸ்டோர்ஸ் நிர்வாகிகள் மறுத்துவிட்டனர்.

இதையடுத்து 1987-ம் ஆண்டு ரவிகந்தேல்வால், ஜெய்ப்பூரிலுள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஜெய்ப்பூர் விசாரணை நீதிமன்றம், 2004-ல் அதாவது 17 ஆண்டுகளுக்குப் பின்னர், துலிகா ஸ்டோர்ஸ் நிறுவனத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது,

விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் 2004-ல் ரவி கந்தேல்வால் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் 2020-ம் ஆண்டில் அதாவது 16 ஆண்டுகளுக்குப் பின்னர், துலிகா ஸ்டோர்ஸ் நிறுவனத்துக்கு ஆதரவாகவே தீர்ப்பு வழங்கியது.

இதைத் தொடர்ந்து 2020-ல் உச்ச நீதிமன்றத்தில் ரவி கந்தேல்வால் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல், அசானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் அண்மையில் நீதிபதிகள் தீர்ப்பை வழங்கினர். அப்போது ரவி கந்தேல்வாலுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது. ரவி கந்தேல்வால் வாங்கிய இடத்தை அவரிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும், வாடகைக்கு இருந்து வரும் துலிகா ஸ்டோர்ஸ் இடத்தை காலி செய்யவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து 38 ஆண்டுகளுக்குப் பிறகு தான் வாங்கிய இடத்தை ரவி கந்தேல்வால் பெறப் போகிறார்.

அவகாசம் வழங்கப்படவில்லை: தங்களது தீர்ப்பில் நீதிபதிகள் கூறியதாவது: ராஜஸ்தான் மாநில வாடகை கட்டுப் பாட்டுச் சட்டத்தின்படி 5 ஆண்டுகளுக்கு மட்டுமே ஒரு இடத்தில் குடியிருக்க முடியும். இந்நிலையில் இந்த சட்டத்துக்கு மாற்றாக புதிய சட்டம் ராஜஸ்தானில் இயற்றப்பட்டுள்ளது. அதன்படி கட்டாய வாடகை காலத்துக்கு சட்டத்தில் அவகாசம் வழங்கப்படவில்லை.

மேலும் ஓர் இடத்தை சுமார் 38 ஆண்டு காலம் தங்களது வசம் வாடகைக்கு வைத்திருப்பதும் அசாதாரணமான விஷயமாகும். தாமதமாகும் நீதி அநீதி என்று 19-ம் நூற்றாண்டு ஆங்கிலக் கவிஞர் வால்டர் சாவேஜ் லேண்டார் கூறியிருக்கிறார். நீதி வழங்குவதில் நீண்ட காலம் தாமதம் ஏற்படுவது நீதித்துறையின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்கச் செய்கிறது. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் சூழ்நிலையை கவனத்தில் கொண்டு, சூழ்நிலையை மாற்றுவதற்கான வழிகளை வகுக்க வேண்டும்.

இந்த வழக்கு இவ்வளவு காலம் கடந்து வந்துள்ளதால் மேல்முறையீட்டுக்கு அவசியமில்லை என்று கருதுகிறோம். மேலும், இது நீதித்துறை மீதான கேலிக்கூத்தாக இருக்கும். எனவே, ரவி கந்தேல்வால் வாங்கிய இடத்தை அவரிடம் ஒப்படைக்க உத்தரவிடுகிறோம். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

நாட்டில் சுமார் 31,632 சொத்து வழக்குகளும், 70,938 கிரிமினல் வழக்குகளும் பல்வேறு மாநிலங்களில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. மேற்கு வங்க மாநிலம் மால்டா நீதிமன்றத்தில் 1952-ல் தொடரப்பட்ட சொத்து வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது. இதன் மீதான விசாரணை வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

இந்தியா

27 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்