மீண்டும் நிதித்துறையை கைப்பற்றிய அஜித் பவார் - சரத் பவார் உடன் திடீர் சந்திப்பு

By செய்திப்பிரிவு

மும்பை: சுமார் இரண்டு வார இழுபறிக்கு பின் துணை முதல்வராக பொறுப்பேற்று கொண்ட அஜித் பவாருக்கு மகாராஷ்டிர அமைச்சரவையில் நிதித் துறை மற்றும் திட்டமிடல் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இன்று மாற்றியமைக்கப்பட்ட மகாராஷ்டிர அமைச்சரவையில் நிதித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார் அஜித் பவார். முன்பு சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் அமைந்திருந்த மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசிலும் அஜித் பவார் இதே துறையை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதும் அதே துறையை கைப்பற்றியுள்ளார்.

முன்னதாக, அஜித் பவார், தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர்கள் பிரபுல் படேல், சகன் புஜ்பால், சுனில் தட்கரே ஆகியோர் கட்சியின் பெருமளவு எம்எல்ஏ மற்றும் எம்எல்சிக்களுடன் கடந்த 2-ம் தேதி, ஆளும் சிவசேனா - பாஜக கூட்டணியில் இணைந்தனர். இதையடுத்து அஜித் பவார் துணை முதல்வராகவும் அவரது அணியை சேர்ந்த 8 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.

அதைத் தொடர்ந்து நிதி, நீர்வளம் உள்ளிட்ட முக்கிய துறைகளை தேசியவாத காங்கிரஸ் கோரி வந்தது. இதற்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவிக்க துறைகள் ஒதுக்கீட்டில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. எனினும் அஜித் பவார் அணி துறைகளை பெறுவதில் பிடிவாதம் காட்டியதுடன் அஜித் பவார், பிரபுல் படேல் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக மூத்த தலைவர்களை சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்புக்கு பின் நிதித்துறை அஜித் பவாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் சகன் புஜ்பால் உணவு மற்றும் சிவில் சப்ளைஸ் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சராகவும், திலீப் வால்ஸ் பாட்டீல் கூட்டுறவுத் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர். மேலும், தனஞ்சய் முண்டேவுக்கு விவசாயத் துறையும், ஹசன் முஷ்ரிப்புக்கு மருத்துக் கல்வித் துறையும், தர்மராவ் அத்ரமுக்கு உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையும், அதிதி தட்கரேவுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையும் ஒதுக்கப்பட்டது.

அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட சில மணி நேரங்களில் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் வீட்டுக்குச் சென்றார். சரத் பவாரின் மனைவி பிரதிபாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார். அவைச் சந்தித்து நலம் விசாரிப்பதற்காக அஜித் பவார் சரத் பவார் வீட்டுக்குச் சென்றார் என்று சொல்லப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE