இந்தியா

விண்ணில் பாய்ந்த சந்திரயான்-3 முதல் செந்தில் பாலாஜி வழக்கு தீர்ப்பு வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஜூலை 14, 2023

செய்திப்பிரிவு

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-3: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மூலம் நிலவின் தென் துருவத்தை ஆராய சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் சிறப்பான மைல்கல்லாக அமைந்த சந்திரயான் பயணத்தின் மூன்றாவது விண்கலம் சந்திரயான்-3, ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தின் இரண்டாவது செலுத்து தளத்தில் இருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் 02:35 மணி 17 நொடிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

சந்திரயான்-3 விண்கலம் புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டு, 3 நிலைகளில் படிப்படியாக அதன் சுற்று வட்டப்பாதை உயர்த்தப்படும். இந்த முறை சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் வாகனம் ஆகியவை நிலவின் மேற்பரப்பில் மென்மையான தரையிறக்கம் மூலமாக கீழ் இறக்கப்பட்டு நிலவின் மேற்பரப்பில் சில வேதிப்பொருட்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

சந்திரயான்-3 புவி சுற்று வட்டப்பாதையில் இருந்து நிலவின் சுற்றுவட்ட பாதைக்கு ஆகஸ்ட் 1-ம் தேதி செல்லும் என்று இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் தெரிவித்தார். ஆகஸ்ட் 23-ம் தேதி மாலை 05:47 மணிக்கு, சந்திரனில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் என்று அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய சந்திரயான்-3 திட்ட இயக்குநர் மோகன் குமார், "சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதன் மூலம் மீண்டும் அது மிகவும் வலுவான ஒரு விண்கலம் என்பதை உலகுக்கு நிரூபித்துள்ளது" என்று பெருமிதம் தெரிவித்தார்.

“இந்திய விண்வெளி சாகசத்தில் ‘சந்திரயான்-3’ புதிய அத்தியாயம்”: "இந்தியாவின் விண்வெளி சாகசத்தில் புதிய அத்தியாயத்தை சந்திரயான்-3 படைத்துள்ளது. அது உயரப் பறந்து ஒவ்வொரு இந்தியரின் லட்சியங்களையும், கனவுகளையும் உயர்த்தியுள்ளது. இந்த மகத்தான சாதனை நமது விஞ்ஞானிகளின் இடையறாத அர்ப்பணிப்புக்கு சான்றாகும். அவர்களது உணர்வுக்கும், மதிநுட்பத்துக்கும் நான் தலைவணங்குகிறேன்" என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

“இஸ்ரோ விஞ்ஞானிகள் செலுத்திய உழைப்பின் பலன்”: "இன்று 100 கோடிக்கும் அதிகமான மக்கள் வானத்தை நோக்கி பெருமிதத்துடன் பார்த்தோம். 1962-ல் இஸ்ரோ தோற்றுவிக்கப்பட்டதில் இருந்து விஞ்ஞான சமூகத்தினர் செலுத்திய கடுமையான உழைப்பின் பலன் தான் சந்திரயான்-3. இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் நிலவின் பரப்பில் விண்கலத்தை இறக்கிய 4-வது தேசம் என்ற பெருமையை இந்தியா பெற்றுவிடும். அது நிச்சயமாக ஒரு வியத்தகு கொண்டாட்டமாக இருக்கும். இஸ்ரோ குழுவினருக்கு பாராட்டுகள்" என்று காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சந்திரயான்-3 மிஷனில் பணியாற்றிய 54 பெண்கள்: சந்திரயான்-3 திட்டத்தில் 54 பெண்கள் பணியாற்றியதாக இஸ்ரோ மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை நிலவுக்கு பயணத்தைத் தொடங்கியுள்ள சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குநர் மோகன் குமார். ராக்கெட் இயக்குநர் பிஜு சி தாமஸ். விண்கல இயக்குநர் டாக்டர் பி.வீரமுத்துவேல். இவர்களுடன் சேர்த்து 54 பெண்கள் இந்தத் திட்டத்தில் முக்கியப் பணியாற்றியுள்ளனர். இவர்கள் பொறியாளார்கள், விஞ்ஞானிகள் போன்ற பதவியில் இருப்பவர்களாவர். மேலும் சந்திராயன் 3 திட்டத்தில் இணை இயக்குநர்கள், திட்ட மேலாளர்களாகவும் பணி புரிந்துள்ளனர்.

செந்தில் பாலாஜி கைது சரியே - மூன்றாவது நீதிபதி தீர்ப்பு: அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது. ஏற்கெனவே இரு நீதிபதிகள் அமர்வில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக, 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தீர்ப்பளித்துள்ளார்.

செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்ற காவலில் இருக்கிறார். பலமுறை சம்மன் அனுப்பி, செந்தில் பாலாஜி அமலாக்கத் துறை விசாரணைக்கு நேரிலும், ஆடிட்டர் மூலமாகவும் ஆஜராகியிருக்கிறார். அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள இந்த வழக்கை எதிர்த்து அவர் வழக்கு தொடரவில்லை. இவரது கைது குறித்து அவரது சகோதரர் மற்றும் உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது. அவரை நீதிமன்ற காவலில் வைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சட்டப்படியானது" என்று அவர் தீர்ப்பளித்துள்ளார்.

இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததா, இல்லையா என்ற கேள்விக்கு, மேற்கூறிய காரணங்களால், இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு ஏற்கதக்கதல்ல. இந்த வழக்கில் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்திருந்த இரு நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி பரத சக்ரவர்த்தியின் உத்தரவை ஏற்றுக்கொள்கிறேன். இந்த தீர்ப்பை தலைமை நீதிபதிக்கு சமர்ப்பிக்கவும் பதிவுத் துறை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. இதனால் வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மத்திய குற்றப் புலனாய்வு போலீஸ் மனு: அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை முடிக்க கூடுதலாக 6 மாத காலம் அவகாசம் கோரி, உச்ச நீதிமன்றத்தில் சென்னை மத்திய குற்றப் புலனாய்வு காவல் துறை இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

திமுக எம்பிக்கள் கூட்டத்தில் பாஜகவுக்கு எதிராக தீர்மானம்: சென்னை அண்ணா அறிவாலயம் திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை,மாநிலங்களவை எம்பிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடந்தது. அதில், பாஜகவுக்கு இனியொரு முறை மக்கள் வாய்ப்பை கொடுத்தால் இந்தியாவும், அரசியல் சட்டமும் தாங்காது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக ஊழல் பட்டியலின் 2-ஆவது பாகம் தயார்: அண்ணாமலை: திமுக ஊழல் பட்டியலின் 2 ஆவது பாகம் தயாராக உள்ளது. பாகம் 2 பாதயாத்திரைக்கு முன்பாக ஜூலை மாதத்துக்குள் வெளியிடப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ராணுவ உதவியை நாடிய கேஜ்ரிவால்: யமுனை நதியின் நீர்மட்டம் வியாழக்கிழமை வரலாறு காணாத அளவு உயர்ந்ததால் டெல்லியின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. நிலையமையை சமாளிக்க ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையின் உதவியை நாட தலைமைச்செயலருக்கு முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உத்தரவிட்டிருந்தார்.

பொது சிவில் சட்டம்: சீமான் கருத்து: "பொது சிவில் சட்டம் கொண்டுவருவோம் என்று வாக்குறுதியளித்து, கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் எவ்வாறு மண்ணைக் கவ்வியதோ, அப்படியே எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பொது சிவில் சட்டத்தால் பாஜக படுதோல்வியைச் சந்திக்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு பிரான்ஸின் உயரிய விருது:கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லீஜியன் ஆஃப் ஹானர் எனும் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரானால் வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT