“அவரது அக்கறை நன்று!” - டெல்லி வெள்ளம் குறித்த பிரதமர் மோடியின் விசாரிப்பை விமர்சித்த காங்கிரஸ்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லியின் வெள்ள பாதிப்புகள் குறித்து பிரான்ஸில் இருந்து தொலைப்பேசி வழியாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் விசாரித்த பிரதமர் மோடியை, "அவர் அக்கறைக் காட்டியது நல்லது" என்று காங்கிரஸ் கட்சி என்று விமர்சித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பாரிஸில் இருக்கும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சரை தொலைப்பேசியில் அழைத்து டெல்லியின் வெள்ள நிலவரம் குறித்து விசாரித்துள்ளார். அவர் இவ்வளவு அக்கறை காட்டுவது நல்லதுதான். ஆனால் இதேபோல அவர் அமெரிக்கச் சென்றிருந்தபோது மணிப்பூர் பற்றி எரிந்தது குறித்து ஏன் அழைத்து விசாரிக்கவில்லை?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், "பிரதமர் பாரிஸில் இருக்கும் இந்த சமயத்திலும் மணிப்பூர் பற்றி எரிந்துகொண்டு இருக்கிறது. ஆனால் பிரதமரோ மணிப்பூர் குறித்து முழுமயாக மவுனம் காப்பது என்று சபதம் எடுத்திருப்பது போல் தெரிகிறது" என்றும் விமர்சித்துள்ளார்.

முன்னதாக, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் அழைப்பை ஏற்று, அந்நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறை பயணமாக வியாழக்கிழமை பிரான்ஸ் புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து டெல்லி வெள்ள பாதிப்புகள் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தொலைப்பேசியில் தகவல் கேட்டறிந்தார். இந்தச் சூழ்நிலையில் ஜெய்ராம் ரமேஷ் இவ்வாறு ட்வீட் செய்துள்ளார்.

தத்தளிக்கும் தலைநகரம்: கனமழை மற்றும் அணைகள் நிரம்பி வழிவதால் டெல்லியில் யமுனை நதியின் நீர்மட்டம் வரலாறு காணாத அளவிற்கு கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் நதிநீர் டெல்லி நகருக்குள் புகுந்து அதன் பெரும்பாலான பகுதி வெள்ளத்தில் தத்தளிக்கிறது. வியாழக்கிழமை வரலாறு காணாத அளவுக்கு யமுனையின் நீர்மட்டம் உயர்ந்து தாழ்வான பகுதிகளைக் கடந்து நகருக்குள் புகுந்தது. வியாழன் இரவு நீர் மட்டம் 208.62 மீட்டர் இருந்தது.வெள்ளிக்கிழமை 208.46 மீட்டராக குறைந்து காணப்பட்டது. என்றாலும் நதியின் நீர்மட்டம் இன்னும் 205.33 மீட்டராகவே இருப்பதால் பதற்றம் குறையவில்லை.

இயல்புவாழ்க்கை பாதிப்பு: யமுனை நதியின் நீர்மட்டம் உயர்ந்ததால் டெல்லியின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் டெல்லி அரசு 16-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. யமுனையில் தொடர்ந்து நீர் நிரம்பி வழிவதால் நகரில் வீடுகள், சந்தைகள், அரசு அலுவலகங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தால் பேருந்து முனையங்கள், மெட்ரோ ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ளம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிவரும் வாகனங்கள் தவிர, டெல்லிக்குள் இதர கனரக வாகனங்கள் நுழைவதற்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளது.

வெள்ளத்துக்கான காரணம்: டெல்லியில் மழை இல்லாமல் ஏற்பட்டுள்ள இந்த திடீர் வெள்ளம் குறித்து மத்திய நீர்வள ஆணையத்தின் அதிகாரிகள் கூறுகையில், "ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து டெல்லிக்கு உபரி நீர் வெகு சீக்கிரமாக வந்தடைந்துள்ளது. நீர்வழிப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் காரணமாக அது கடந்து செல்ல ஒரு குறுகிய பாதை மட்டுமே உள்ளது. வெள்ளம் பாய்வதன் வேகமும் மிக அதிகமாக இருக்கிறது. இதனால் பல வழிகளிலும் உபரி நீர் வெகு துரிதமாக யமுனையை வந்தடைந்து அங்கு நீர்மட்டத்தை தொடர்ந்து உயரச் செய்து வருகிறது.

அதேபோல், வண்டல் மண் அதிகமாக சேர்ந்ததன் காரணமாக யமுனை ஆற்றுப் படுகையும் உயர்ந்துள்ளது. இதனாலேயே அதிக மழையில்லாவிட்டாலும் கூட யமுனையின் நீர்மட்டம் தொடர்ந்து வரலாறு காணாத புதிய உச்சங்களை தொட்டு வருகிறது" என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE