1962 தொடங்கி இஸ்ரோ விஞ்ஞானிகள் செலுத்திய உழைப்பின் பலன் சந்திரயான்-3: ராகுல் காந்தி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: 1962-ல் இஸ்ரோ தோற்றுவிக்கப்பட்டதில் இருந்து விஞ்ஞான சமூகத்தினர் செலுத்திய கடுமையான உழைப்பின் பலன்தான் சந்திரயான்-3 என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் இன்று மதியம் 2.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான் -3 விண்கலம் பூமியில் இருந்து 179 கிலோ மீட்டர் தொலைவில் அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோமநாத் உறுதி செய்தார். இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதனை ஒட்டி காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்று 100 கோடிக்கும் அதிகமான மக்கள் வானத்தை நோக்கி பெருமிதத்துடன் பார்த்தோம். 1962-ல் இஸ்ரோ தோற்றுவிக்கப்பட்டதில் இருந்து விஞ்ஞான சமூகத்தினர் செலுத்திய கடுமையான உழைப்பின் பலன் தான் சந்திரயான்-3. இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் நிலவின் பரப்பில் விண்கலத்தை இறக்கிய 4-வது தேசம் என்ற பெருமையை இந்தியா பெற்றுவிடும். அது நிச்சயமாக ஒரு வியத்தகு கொண்டாட்டமாக இருக்கும். இஸ்ரோ குழுவினருக்கு பாராட்டுகள்" என்று பதிவிட்டுள்ளார். | வாசிக்க > வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது சந்திரயான்-3

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE