நிலவுக்குச் செல்லும் சந்திரயான்-3 விண்கலம்: மிஷனில் பணியாற்றிய 54 பெண்கள்!

By செய்திப்பிரிவு

ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான்-3 திட்டத்தில் 54 பெண்கள் பணியாற்றியதாக இஸ்ரோ மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் இன்று (ஜூலை 14) மதியம் 2.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்நிலையில், இந்தத் திட்டத்தில் பணியாற்றியவர்கள் 54 பேர் பெண்கள் என்பது இப்போது தெரியவந்துள்ளது. இவர்கள் பொறியாளார்கள், விஞ்ஞானிகள் பதவியில் இருப்பவர்களாவர். மேலும் சந்திராயன் 3 திட்டத்தில் இணை இயக்குநர்கள், திட்ட மேலாளர்களாக பணி புரிந்துள்ளனர்.

திட்டத்தின் பின்னணியில்... - சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குநர் மோகன் குமார். ராக்கெட் இயக்குநர் பிஜு சி தாமஸ். விண்கல இயக்குநர் டாக்டர் பி.வீரமுத்துவேல். இவர்களுடன் சேர்த்து 54 பெண்கள் இந்தத் திட்டத்தில் முக்கியப் பணியாற்றியுள்ளனர். இவர்களில் ஸ்ரீஹரிகோட்ட ராக்கெட் தளத்தில் வர்ணனையாளராக இருக்கும் பி.மாதுரி தான் வெளிப்படையாக அனைவருக்கும் தெரிந்த பெண்ணாக இருக்கிறார். மற்றவர்கள் திட்டத்தின் பின்னணியில் செயல்பட்டவர்கள் ஆவர்.

முன்பு மங்கள்யான் இப்போது சந்திரயான்... - ரித்து கரிதால் ஸ்ரீவஸ்தவா சந்திரயான் - 3 திட்டத்தின் முக்கிய முகமாக இருக்கிறார். இவர் இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானிகளில் ஒருவர். இவர் செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்வெளித் திட்டத்திலும் முக்கியப் பங்காற்றியவராவார். ரிது கரிதால் லக்னோ பல்கலைக்கழகத்தில் 1996-ஆம் ஆண்டு இயற்பியல் பயின்றார். அதன் பின்னர் பெங்களூரு இந்திய அறிவியல் மையத்தில் எம்.டெக் பயின்றார். 1997-ல் இஸ்ரோவில் இணைந்த இவர் பல்வேறு திட்டங்களிலும் தனது பங்களிப்பை செலுத்தியுள்ளார். 20-க்கும் மேற்பட்ட சர்வதேச இதழ்களில் இவரது ஆராய்ச்சிக் கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன. | வாசிக்க > வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது சந்திரயான்-3

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE