ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் இன்று மதியம் 2.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இஸ்ரோ தலைவர் சோமநாத், "திட்டமிட்டபடி விண்கலம் பூமியில் இருந்து 179 கிலோ மீட்டர் தொலைவில் அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. சந்திரயான்-3 நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கிவிட்டது. இனி எல்லாம் சரியாக நடைபெற வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார். 'மிஷன் அக்கம்ப்ளிஷ்ட்' என்று ஆங்கிலத்தில் அவர் உரையைத் தொடங்கியதும் அரங்கில் கரகோஷம் எழுந்தது.
தொடர்ந்து பேசிய சந்திரயான்-3 திட்ட இயக்குநர் மோகன் குமார், "சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதன் மூலம் மீண்டும் அது மிகவும் வலுவான ஒரு விண்கலம் என்பதை உலகுக்கு நிரூபித்துள்ளது" என்று பெருமிதம் தெரிவித்தார். தொடர்ந்து இந்தத் திட்டத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தனது வாழ்த்துகளையும் நன்றியையும் அவர் பதிவு செய்தார்.
பிரதமர் மோடி பெருமிதம்: பிரான்ஸ் அதிபரின் அழைப்பை ஏற்று, அந்நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி பாரிஸ் சென்றுள்ளார். சந்திரயான்-3 விண்ணில் ஏவப்படும் நிகழ்வை அங்கிருந்தவாறே பிரதமர் கவனித்து வந்தார். இந்நிலையில், "இந்தியாவின் விண்வெளி சாகசத்தில் புதிய அத்தியாயத்தை சந்திரயான்-3 படைத்துள்ளது. அது உயரப் பறந்து ஒவ்வொரு இந்தியரின் லட்சியங்களையும், கனவுகளையும் உயர்த்தியுள்ளது. இந்த மகத்தான சாதனை நமது விஞ்ஞானிகளின் இடையறாத அர்ப்பணிப்புக்கு சான்றாகும். அவர்களது உணர்வுக்கும், மதிநுட்பத்துக்கும் நான் தலைவணங்குகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
» இந்திய விண்வெளித் துறை வரலாற்றில் 14 ஜூலை 2023 பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்: பிரதமர் மோடி
» Moon landings | 1958 முதல் நிலவு ஆராய்ச்சிக்காக உலக நாடுகள் மேற்கொண்ட 70 மிஷன்கள்
மத்திய அமைச்சர் பாராட்டு: விண்வெளித் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசுகையில், "இது நிச்சயமாக இந்தியாவின் ஒரு மகத்தான தருணம். ஓர் இலக்கை நோக்கிய வரலாற்றுப் பயணத்தின் தொடக்கம். இந்தியாவை பெருமிதம் கொள்ளச் செய்த இஸ்ரோவுக்கு நன்றி. 60 ஆண்டுகளுக்கு முன்னர் விக்ரம் சாராபாய் கண்ட கனவை நினைவாக்கியுள்ள நாள். இந்தியாவின் தற்சார்பு நிலையை நிரூபித்துள்ளோம்" என்று தெரிவித்தார்.
ராகுல் காந்தி கருத்து: காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்று 100 கோடிக்கும் அதிகமான மக்கள் வானத்தை நோக்கி பெருமிதத்துடன் பார்த்தோம். 1962-ல் இஸ்ரோ தோற்றுவிக்கப்பட்டதில் இருந்து விஞ்ஞான சமூகத்தினர் செலுத்திய கடுமையான உழைப்பின் பலன் தான் சந்திரயான்-3. இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் நிலவின் பரப்பில் விண்கலத்தை இறக்கிய 4-வது தேசம் என்ற பெருமையை இந்தியா பெற்றுவிடும். அது நிச்சயமாக ஒரு வியத்தகு கொண்டாட்டமாக இருக்கும். இஸ்ரோ குழுவினருக்கு பாராட்டுகள்" என்று பதிவிட்டுள்ளார்.
இஸ்ரோவின் நிலவு மிஷன்கள்: நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-2 விண்கலத்தை கடந்த 2019 ஜூலை 22-ம் தேதி விண்ணில் செலுத்தியது. பல்வேறுகட்ட பயணங்களுக்கு பிறகு, சந்திரயான்-2 விண்கலம் 2019 செப்டம்பரில் நிலவின் சுற்றுப்பாதையை அடைந்தது.
எனினும், தொழில்நுட்பக் கோளாறால் லேண்டர் கலன் தரையிறங்காமல், நிலவில் மோதி செயலிழந்தது. அதேநேரம், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர், நிலவின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
இதையடுத்து, சந்திரயான்-3 விண்கலத்தை ரூ.615 கோடியில் இஸ்ரோ வடிவமைத்தது. இந்த விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து எல்விஎம்-3 (ஜிஎஸ்எல்வி மார்க்-3) ராக்கெட் மூலம் இன்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் ஏவுதலுக்கான 25.30 மணி நேர கவுன்ட்-டவுன் நேற்று (ஜூலை 13) மதியம் 1 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து, எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.
சந்திரயான்-3 விண்கலம் 3,895 கிலோ எடை கொண்டது. ஏற்கெனவே ஆர்பிட்டர், நிலவை சுற்றி வருவதால், இந்த முறை லேண்டர், ரோவர் கலன்கள் மட்டும் அனுப்பப்படுகின்றன. இவை 14 நாட்கள் நிலவில் ஆய்வு மேற்கொள்ளும். இந்தத் திட்டம் வெற்றியடைந்தால், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு பிறகு, நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 4-வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மிஷனில் 54 பேர் பெண்கள்: இந்தத் திட்டத்தில் பணியாற்றியவர்கள் 54 பேர் பெண்கள் என்பது இப்போது தெரியவந்துள்ளது. இவர்கள் பொறியாளார்கள், விஞ்ஞானிகள் பதவியில் இருப்பவர்களாவர். மேலும் சந்திராயன் 3 திட்டத்தில் இணை இயக்குநர்கள், திட்ட மேலாளர்களாக பணி புரிந்துள்ளனர்.
திட்டத்தின் பின்னணியில்... - சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குநர் மோகன் குமார். ராக்கெட் இயக்குநர் பிஜு சி தாமஸ். விண்கல இயக்குநர் டாக்டர் பி.வீரமுத்துவேல். இவர்களுடன் சேர்த்து 54 பெண்கள் இந்தத் திட்டத்தில் முக்கியப் பணியாற்றியுள்ளனர். இவர்களில் ஸ்ரீஹரிகோட்ட ராக்கெட் தளத்தில் வர்ணனையாளராக இருக்கும் பி.மாதுரி தான் வெளிப்படையாக அனைவருக்கும் தெரிந்த பெண்ணாக இருக்கிறார். மற்றவர்கள் திட்டத்தின் பின்னணியில் செயல்பட்டவர்கள் ஆவர்.
முன்பு மங்கள்யான் இப்போது சந்திரயான்... - ரித்து கரிதால் ஸ்ரீவஸ்தவா சந்திரயான் - 3 திட்டத்தின் முக்கிய முகமாக இருக்கிறார். இவர் இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானிகளில் ஒருவர். இவர் செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்வெளித் திட்டத்திலும் முக்கியப் பங்காற்றியவராவார். ரிது கரிதால் லக்னோ பல்கலைக்கழகத்தில் 1996-ஆம் ஆண்டு இயற்பியல் பயின்றார். அதன் பின்னர் பெங்களூரு இந்திய அறிவியல் மையத்தில் எம்.டெக் பயின்றார். 1997-ல் இஸ்ரோவில் இணைந்த இவர் பல்வேறு திட்டங்களிலும் தனது பங்களிப்பை செலுத்தியுள்ளார். 20-க்கும் மேற்பட்ட சர்வதேச இதழ்களில் இவரது ஆராய்ச்சிக் கட்டுரைகளை பிரசுரமாகியுள்ளன.
முன்னதாக, சந்திரயான்-3 விண்கலத்தின் பயணம் வெற்றியடைய பிரார்த்தனை செய்து, திருப்பதி மாவட்டம் சூலூர்பேட்டை அருகே உள்ள செங்காளம்ம பரமேஸ்வரி கோயிலில் இஸ்ரோ தலைவர் சோமநாத் நேற்று சிறப்பு வழிபாடுகள் செய்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago