டெல்லி நிலவரம் | வெள்ளத்தில் தத்தளிக்கும் தலைநகர்; ராணுவ உதவியை நாடும் கேஜ்ரிவால்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: யமுனை நதியின் நீர்மட்டம் வியாழக்கிழமை வரலாறு காணத அளவு உயர்ந்ததால் டெல்லியின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் டெல்லி அரசு 16 ஆம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. யமுனையில் தொடர்ந்து நீர் நிரம்பி வழிவதால் நகரில் வீடுகள், சந்தைகள், அரசு அலுவலகங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

காலை 6 மணி நிலவரப்படி யமுனையில் நீர்மட்டம் 208.46 மீட்டராக இருந்தது. இது வியாழக்கிழமை இரவு இருந்த 208.66 மீட்டரைவிட சற்று குறைந்திருந்தது. இது இன்று மதியம் 1 மணிக்குள் 208.30 மீட்டராக குறையும் என்று மத்திய நீர் வள ஆணையம் கணித்துள்ளது. இதனிடையே, ஐஓடி மற்றும் ராஜ்கட் பகுதிகள் இன்னும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. டெல்லியின் வெள்ள கட்டுப்பாட்டு ஆணையத்தின் வெள்ள கட்டுப்பாட்டகம் இந்திரபிரஸ்தா அருகே சேதமடைந்துள்ளதால் நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சேதமடைந்த பகுதி வழியாக வெள்ள நீர் நகருக்குள் உள்ளே வருகிறது. இதனால் நகரின் மையப் பகுதியான திலக் மார்க் பகுதியில் அமைந்துள்ள உச்சநீதிமன்றம் வரை வெள்ள நீர் புகுந்துள்ளது.

இதுகுறித்து டெல்லியின் நீர்பாசனம் மற்றும் வெள்ள கட்டுப்பாடு அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில், "எங்கள் குழு, டபில்யூஹெச்ஓ கட்டிடம் அருகே உள்ள கட்டுப்பாட்டகத்தின் சேதத்தினை சீர்செய்யும் பணியில் இரவு முழுவதும் ஈடுபட்டது. இருந்தும் யமுனை நதி நீர் இன்னும் நகருக்குள் புகுந்து வருகிறது. சேதத்தை முன்னுரிமை கொடுத்து சீர்செய்யும்படி தலைமைச் செயலருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

ராணுவ உதவியை நாடும் முதல்வர்: இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த கேஜ்ரிவால் நிலைமையை சீர் செய்ய ராணுவத்தின் உதவியை நாடியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள டீவிட் ஒன்றில், "சேதமடைந்த உடைப்புகள் வழியாக நதி நீர் நகருக்குள் புகுந்து வருகிறது. இதனால் ஐடிஓ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்னும் நீர் சூழந்துள்ளது. இரவு முழுவதும் பொறியாளர்கள் சேதத்தினை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். நான் ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையின் உதவியை நாட தலைமைச்செயலருக்கு உத்தரவிட்டுள்ளேன். சேதம் விரைவில் சீர்செய்யப்படும்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரதமர் விசாரணை: இதனிடையே பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி அங்கிருந்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவை போனில் அழைத்து டெல்லி நிலைமை குறித்து விசாரித்துள்ளார். இந்த உரையாடலின்போது டெல்லியின் வெள்ள நிலவரம் குறித்து விவரித்த உள்துறை அமைச்சர், அடுத்த 24 மணி நேரத்தில் யமுனையின் நீர்மட்டம் குறையும் என எதிர்பார்ப்பதாகக் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தண்ணீர் தட்டுப்பாடு: இதனிடையே மூன்று நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வெள்ளத்தில் முழ்கியுள்ளதால் டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, "வாசிராபாத், சந்திரவால், ஓக்லா நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதால், டெல்லியின் தண்ணிர் விநியோகம் 25 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது" என்று டெல்லி அரசு கூறியுள்ளது.

கனரக வாகனங்களுக்குத் தடை: யமுனையின் வெள்ள நீர் நகருக்குள் புகுந்துள்ள நிலையில், அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிவரும் வாகனங்கள் தவிர, டெல்லிக்குள் இதர கனரக வாகனங்கள் நுழைவதற்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE