நாடு முழுவதும் விலை 400 சதவீதம் அதிகரித்ததால் தக்காளியை மானிய விலையில் விற்க மத்திய அரசு முடிவு

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: நாடு முழுவதும் தக்காளி விலை, 400 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்து கொண்டு செல்கிறது. இதை சமாளிக்க தக்காளியை மானிய விலையில் விற்பனை செய்ய மத்திய அரசு களம் இறங்குகிறது.

தற்போது நிலவி வரும் வழக்கத்திற்கு மாறான தட்பவெட்ப நிலையால் நாடு முழுவதும் கன மழை தொடர்கிறது. இதன் தாக்கமாக தக்காளி பயிர் மிக அதிகமாக சேதம் அடைந்து வருகிறது. இதனால், அதன் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.200 ஐயும் தாண்டியபடி விற்று வருகிறது. வரும் வாரங்களில் இந்த விலை ரூ.300 ஐ தாண்டினாலும் வியப்படைய முடியாது என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விலை உயர்வால் நாட்டின் பெரும்பாலான மாநில அரசுகள் பொதுமக்களிடம் கடும் விமர்சனத்திற்கு ஆளாகி விட்டன. இப்பிரச்சினையை சமாளிக்க தமிழகம் உள்ளிட்ட பல மாநில அரசுகள் நேரடியாக சந்தையில் இறங்கி பொதுமக்களுக்கு நியாயவிலை கடைகள் மூலம் சலுகை விலையில் தக்காளி விற்பனை செய்து வருகின்றன.

இதேநிலை டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் நிலவுகிறது. இதனால், மாநிலங்கள் வழியில் மத்திய அரசும் நேரடியாக களம் இறங்கி பொதுமக்களுக்கு தக்காளி விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மத்திய உணவு மற்றும் நுகர்வோர்துறை அமைச்சகத்தின் சார்பில், தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு(என்ஏஎப்இடி) மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்
வோர் கூட்டமைப்பு (என்சிசிஎப்) ஆகியவற்றுக்கு தக்காளியை கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அமைப்புகளின் சார்பில் ஆந்திரா, கர்நாடகா மற்றும்
மகராஷ்டிராவின் விவசாயிகளிடம் தக்காளியை மொத்த விலையில் கொள்முதல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தக்காளியை நேரடியாக பொதுமக்களிடம் 30 சதவிகித மானிய விலையில் விற்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே, டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில், என்சிசிஎப் சார்பில், சபால், மதர் டெய்ரி மற்றும் தேசிய விற்பனை நிலையங்களிலும், நடமாடும் வாகனங்களிலும் தக்காளி விற்பனை செய்யப்பட உள்ளது. தக்காளியின் விலை குறையும் வரை இந்த விற்பனை முறையை நீட்டிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விற்பனை உ.பியின் கான்பூர் மற்றும் வாரணாசி, மேற்குவங்க தலைநகரான கொல்கத்தாவிலும் நடைபெற உள்ளது. அடுத்து இதன் கொள்முதல் அதிகரிப்பு மற்றும் தேவையை பொறுத்து இதர மாநிலங்களின் முக்கிய நகரங்களிலும் மத்திய அரசு தக்காளியை விற்பனை செய்ய உள்ளது.

இந்தியாவில் தக்காளி உற்பத்தி சந்தைகளாக ஹரியாணா, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், பிஹார், குஜராத், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா,
மகாராஷ்டிரா, ஒடிசா, தமிழ்நாடு ஆகியவை உள்ளன. மத்திய வேளாண் துறையின் புள்ளிவிவரத்தின்படி, நாட்டின் 91% தக்காளி தேவைகளை இந்த மாநிலங்கள் பூர்த்தி செய்கின்றன.

ஆனால், காலநிலை மாற்றத்தினால் தற்போது தென் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலிருந்து மட்டும் தக்காளி நாடு முழுவதிலும் விநியோகிக்கப்படுகிறது. இதற்கு
முன்பாக மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் புதிய வைரஸின் தாக்கமும் தக்காளி பயிரில் ஏற்பட்டதாகத் தெரிகிறது. வரும் ஆகஸ்ட் முதல் செப்டம்பருக்குள் படிப்படியாக தக்காளி விலை சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE