பிஹாரில் சட்டப்பேரவையை நோக்கி பாஜகவினர் பேரணி - போலீஸ் தடியடியில் ஒருவர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

பாட்னா: பிஹார் தலைநகர் பாட்னாவில் சட்டப்பேரவை நோக்கி பாஜகவினர் நடத்திய பேரணியில் போலீஸார் தடியடி நடத்தியதில் பாஜக பிரமுகர் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர்.

பிஹாரில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் கொள்கையில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்களை எதிர்த்து பாஜகவினர் இன்று (வியாழக்கிழமை) சட்டப்பேரவை முற்றுகைப் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியை தடுத்த நிறுத்தும் முயற்சியில் போலீஸார் தடியடியில் ஈடுபட்டதால் ஒருவர் உயிரிழந்தார்; பலர் காயமடைந்தனர்.

பிஹாரில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில், அண்மையில் மாநிலத்தில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் கொள்கையில் அரசு திருத்தம் கொண்டுவந்தது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துவந்தது. ஆளும் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் பாஜகவினர் சட்டப்பேரவை நோக்கி பேரணி நடத்தினர். அப்போது, போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டு வீசியும், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் கூட்டத்தைத் தடுக்க முற்பட்டனர்.

இந்நிலையில், பாஜக பிரமுகர் விஜய் குமார் சிங் உயிரிழந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து முன்னாள் துணை முதல்வர் சுஷில் மோடி கூறுகையில், "போலீஸ் தடியடியில் எங்கள் கட்சித் தொண்டர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. காவல் துறைக்கு எதிராக கொலைக் குற்றப் புகார் கொடுப்போம். எல்லாவற்றுக்கும் நிதிஷ் குமார்தான் பொறுப்பேற்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

நிதிஷ், தேஜஸ்விக்கு எதிராக கோஷம்: பாஜக தொண்டர்கள் பேரணியின்போது காவி நிறத்தில் சட்டை, குர்தா, சேலை, சல்வார் அணிந்திருந்தனர். மேலும் நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டனர். அதனை வலியுறுத்திய வாசகங்கள் அடங்கிய பதாகைகளும் ஏந்தியிருந்தனர். அதுவரை பேரணி அமைதியாகவே சென்று கொண்டிருந்தது. டாக் பங்களா அருகே போலீஸார் தடுப்பு வேலிகள் அமைத்திருந்தனர்.

அதனைத் தாண்டி பாஜகவினர் தங்கள் பேரணியை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முயன்றனர். அப்போது போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்த முயற்சித்தனர். ஆனால், அவர்கள் தடுப்பு வேலிகளைத் தாண்டி சென்றபோது போலீஸார் தடியடி நடத்தினர். கூட்டத்தைக் கலைக்க கண்ணீர் புகை குண்டுகளும் பயன்படுத்தினர். சற்று நேரத்தில் அப்பகுதியே கலவர பூமிபோல் ஆனது. இந்தப் போராட்டத்தில் பாஜக பிரமுகர் விஜய் குமார் சிங் உயிரிழந்தார். இது பாஜகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE