50,000+ சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றம்: இமாச்சலப் பிரதேச பேரிடர் நிலவரம் - ஒரு பார்வை

By செய்திப்பிரிவு

சிம்லா: இயற்கைச் சீற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து 50,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சுகு தெரிவித்துள்ளார்.

மாநிலத்தின் வெள்ள நிலைமைகள் குறித்து இமாச்சலப் பிரதேச முதல்வர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "கடந்த 48 மணிநேரத்தில் மாநிலம் முழுதும் இருந்து 50,000-க்கும் அதிகமான சுற்றுலா பயணிகளை வெற்றிகரமாக வெளியேற்றியுள்ளோம். இந்த இக்கட்டான நேரத்தில் மாநிலத்தில் சாலைகள் மின்சாரம், குடிநீர் விநியோகம், மற்றும் தொடர்பு வசதிகளை மீட்டெடுக்க அயராது பணியாற்றி வரும் எங்களின் பல்வேறு துறைகளைச் சார்ந்த ஊழியர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை 6 இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக மணிகரன் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக டிஜிபி சத்வந்த் அத்வால் திரிவேதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மணிகரனில் இருந்து நல்ல செய்தி, 6 இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பிபி மணிகரன் பகுதிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இஸ்ரேலைச் சேர்ந்த மற்ற 37 பேர், பர்ஷைனி பகுதியில் உள்ளனர். அனைவரும் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளனர். மேலும், ஒரு வெளிநாட்டினர் உட்பட 95 பேர் மீட்கப்பட்டு சங்லா, சித்குள், ரக்‌ஷம் ஆகிய பகுதிகளுக்கு பாதுகாப்பாக மாற்றப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையில், மாநிலம் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாக புதன்கிழமை அரசு தெரிவித்திருந்தது. மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மைச் செயலாளர், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசும்போது, "சூழ்நிலை மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் தொலைத்தொடர்பு மற்றும் இணைய வசதிகள் மீட்டெடுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. மின் வசதியும் சீராகியுள்ளது. பல்வேறு இணைப்புச் சாலைகள் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன" என்று கூறியிருந்தார்.

முன்னதாக, மாநில முதல்வர் சுக்விந்தர், "மாநிலத்தில் வெள்ளப் பகுதிகளில் சிக்கித் தவித்த சுற்றுலாப் பயணிகளில் 50 சதவீதம் பேர் வெளியேற்றப்பட்டுவிட்டனர். சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக மீட்பதே எங்களின் முதன்மையான குறிக்கோள். அதன்பின்னர், மின்சாரம், குடிநீர் விநியோகம் மீட்டெடுப்பதில் கவனம் செலுத்தப்படும். சுமார் ரூ.4,000 கோடி மதிப்புள்ள பொருட்கள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன" என்று தெரிவித்திருந்தார்.

போக்குவரத்து நிலைமை: "மாநிலத்தில் மொத்தம் 3,700 வழித்தடங்கள் உள்ளன. இன்றைய நிலைமக்கு 1,200 வழித்தடங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. அவைகளில் பெரும்பாலானவை குல்லு மாவட்டத்தில் உள்ளவை. மற்றவை மண்டி, மேல் சிம்லா மற்றும் பழங்குடிகள் பகுதிகளில் உள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் 250 வழித்தடங்கள் சரிசெய்யப்பட்டுள்ளன. இன்று 200 -250 வழித்தடங்கள் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம். நேற்று வரை 650 பேருந்துகள் நிலச்சரிவு பகுதிகளில் சிக்கி இருந்தன. கடந்த 24 மணிநேரத்தில் நிலைமை மேம்பட்டுள்ளது" என்று இமாச்சலப் பிரதேச சாலை மற்றும் போக்குவரத்து நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ரோகன் சந்த் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

மழை பாதிப்பு: இமாச்சலப் பிரதேசம், டெல்லி, உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், ஹரியாணா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதில் மலைகள் நிறைந்த இமாச்சலப் பிரதேசம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து முடங்கி உள்ளது.

இமாச்சலில் பெய்து வரும் கனமழை காரணமாக அம்மாநிலத்துக்கு சுற்றுலா சென்ற பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். நிலச்சரிவால் சாலைகளில் சிக்கி தவிக்கின்றனர். வாகனங்களும் நிலச்சரிவில் சேதமடைந்துள்ளன. வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை புதன்கிழமை 80 ஆக அதிகரித்திருந்தது. மாநில முதல்வர் சுக்விந்தர் சுகு திங்கள் கிழமை குல்லு பகுதிக்கு சென்று வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டார்.

உத்தராகண்ட்: ஹரித்துவார் நகரில் கடுமையாக தண்ணீர் தேங்கியுள்ளது. நகரம் ஸ்தம்பித்துள்ளது. மக்களுக்கு உதவ தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாநில முதல்வர் புஷ்கர் தாமி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலம் மூனாக் பகுதியில் உள்ள காக்கர் நதியில் தண்ணீர் அளவு 754 அடியைத் தாண்டியுள்ளது. கடந்த 1993ம் ஆண்டு வெள்ளத்திற்கு பின்னர் தண்ணீர் அளவு இந்த அளவுக்கு அதிகரித்திருப்பது இதுவே முதல் முறை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்தியப் பிரதேசம்: மத்திய பிரதேச மாநிலத்தில் நர்மதை நதி அபாயக்கட்ட அளவான 123.500 அடியைக் கடந்து, பார்வாணியின் ராஜ்கட் பகுதியில் 124.360 அடியில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆற்றின் கரையோர பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். | டெல்லி நிலவரம் > யமுனை ஆற்றில் தொடர்ந்து உயரும் நீர்மட்டம் - டெல்லியில் போக்குவரத்து பாதிப்பு; பள்ளிகளுக்கு விடுமுறை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்