ராஜஸ்தான் அரசு கண் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையில் 18 பேர் பார்வை இழப்பு

By செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட18 பேர் பார்வை இழந்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் மிகப்பெரிய அரசு மருத்துவமனையாக சவாய் மான் சிங் (எஸ்எம்எஸ்) மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில், ராஜஸ்தான் மாநில அரசின் இலவச சிரஞ்சீவி சுகாதாரத் திட்டத்தின் கீழ் அண்மையில் 18 பேருக்கு கண்புரை நீக்க அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. இதையடுத்து அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

சிகிச்சைக்குப் பின்னர் சில நோயாளிகள், தங்களுக்கு கண்களில் கடுமையான வலி இருப்பதாக டாக்டர்களிடம் புகார் தெரிவித்தனர். பார்வையும் சரிவர தெரியவில்லை. இதையடுத்து அவர்கள் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் அந்த நோயாளிகளுக்கு மீண்டும் அறுவை சிகிச்சை நடைபெற்றது. ஆனாலும் அவர்களால் பார்க்க முடியவில்லை.

2 முறை அறுவை சிகிச்சை

சிலருக்கு 2 முறை மீண்டும் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அப்போதும் அவர்களுக்கு பார்வை திரும்ப கிடைக்கவில்லை. இந்த சம்பவம் ராஜஸ்தானில் பெரிய அளவில் புயலைக் கிளப்பியுள்ளது.

இதுகுறித்து நோயாளி ஒருவர் கூறும்போது, “எனக்கு கடந்த ஜூன் 23-ம் தேதி கண்புரை நீக்க அறுவை சிகிச்சை நடைபெற்றது. ஜூலை 5-ம் தேதி வரை எனக்கு பார்வை இருந்தது. 6-ம் தேதி முதல் பார்க்க முடியவில்லை. எனக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்தனர். ஆனாலும் பார்வை கிடைக்கவில்லை” என்றார்.

மற்றொரு நோயாளி கூறும்போது, “பார்வை பறிபோனது கண்ணில் ஏற்பட்ட நோய்த் தொற்றால் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த நோய்த் தொற்றை நீக்க அறுவை சிகிச்சை செய்கிறோம் என்று கூறினர். ஆனாலும் பார்வை கிடைக்கவில்லை" என்றார்.

இதுகுறித்து மருத்துவ மனையின் கண் சிகிச்சைப் பிரிவு அதிகாரிகள் கூறும்போது, “எங்கள் சிகிச்சையில் எந்த குறைபாடும் இல்லை. ஏன் அவர்களுக்கு பார்வை பறிபோனது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி வருகிறோம்” என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE