யமுனை ஆற்றில் வரலாறு காணாத வெள்ளம் - மத்திய அரசுக்கு முதல்வர் கேஜ்ரிவால் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லியில் உள்ள யமுனை ஆற்றில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை உள்ளூர் நிர்வாகம் வேறு இடத்திற்கு மாற்றியதுடன், பழைய ரயில்வே பாலத்தில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஆற்றங்கரையோரங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மீட்புப்பணிகளுக்காகவும் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. யமுனை ஆற்றில் 45 ஆண்டுகளுக்கு முன்பு நீர்மட்டம் 207.49 மீட்டரை தொட்டதே அதிகபட்ச அளவாக கருதப்பட்டு வந்தது. இந்த நிலையில், யமுனை ஆற்றில் தற்போது 207.55 மீட்டரை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

இதனால், ஆற்றங்கரையில் வசிக்கும் மக்களின் வீடுகள் மற்றும் சந்தைகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் அவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களது உடமைகளை எடுத்துக்கொண்டு மொட்டைமாடிக்கு இடம்பெயர்ந்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை மிரட்சியுடன் பார்த்து வருகின்றனர்.

இதனிடையே டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அவசர கூட்டத்தை கூட்டி ஹரியாணாவின் ஹட்னிகுண்ட் தடுப்பணையில் தண்ணீர் திறக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “ டெல்லியில் 2 நாட்களாக மழை குறைந்துள்ளது. ஆனால், ஹட்னிகுண்ட் தடுப்பணையில் வழக்கத்துக்கு மாறாக தண்ணீர் திறக்கப்படுவதால் யமுனையின் நீர்மட்டம் அபாய அளவுக்கு உயர்ந்து வருகிறது. பாதுகாப்பு கருதி தண்ணீர் திறக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேஜ்ரிவால் தெரிவித்தார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளம் பாதித்த பகுதிகளில் பொதுமக்கள் கூடுவதற்கு டெல்லி போலீஸார் தடை விதித்துள்ளனர். யமுனை ஆற்றில் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளதாக மத்திய நீர் ஆணைய அதிகாரிகள் கணித்துள்ளனர்.

கனமழையால் இமாச்சல பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களும் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன. இந்த நிலையில், உத்தராகண்ட் மாநிலத்தின் பக்கம் தற்போது மழையின் சீற்றம் திரும்பியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE