துணை முதல்வர் தேஜஸ்வி ராஜினாமா செய்ய வேண்டும் - பிஹார் சட்டப்பேரவையில் பாஜக கடும் அமளி

By செய்திப்பிரிவு

பாட்னா: பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மீது ஊழல் வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய கோரி முக்கிய எதிர்க்கட்சியான பாஜக கடும் அமளியில் ஈடுபட்டது.

ரயில்வே துறையில் வேலை வழங்குவதற்கு லஞ்சமாக நிலம்பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் துணை முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தள நிறுவனர் லாலு பிரசாத்தின் மகனுமான தேஜஸ்வி மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சமீபத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த சூழ்நிலையில், பிஹார் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது.

அப்போது, ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட துணை முதல்வர் தேஜஸ்வி பதவியில் நீடிப்பது முறையல்ல என்று முக்கிய எதிர்க்கட்சியான பாஜக வலியுறுத்தியது. மறுநாள் செவ்வாய்க்கிழமையும் இதுதொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று காலை 11 மணிக்கு அவை கூடியதும் எதிர்க்கட்சித் தலைவர் விஜய் குமார் சின்கா தலைமையில் பாஜக எம்எல்ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

அவர்களை சமாதானப்படுத்த சபாநாயகர் அவத் பிஹாரி சவுத்ரி முயற்சி செய்தார். எனினும், பாஜக எம்எல்ஏ.க்கள் தொடர்ந்து காகித துண்டுகளை வீசி கூச்சலிட்டனர். ஒரு கட்டத்தில் நிருபர் இருக்கை ஒன்றை உடைத்தனர். பாஜக தலைமை கொறடா ஜானக் சிங் பேசும்போது, ‘‘பிஹார் பேரவையில் ஒரு மரபு பின்பற்றப்படுகிறது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு எந்த அமைச்சராக இருந்தாலும் தார்மீக பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்வார்கள். அல்லது முதல்வரே அவர்களை பதவி விலக சொல்வார். அந்த மரபை பின்பற்றி துணை முதல்வர் தேஜஸ்வி ராஜினாமா செய்ய வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சித் தலைவர் விஜய் குமார் சின்கா பேசும் போது, ‘‘ஊழலை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என்று முதல்வர் நிதிஷ் குமார் அடிக்கடி கூறுவார். இப்போது நிலைமை என்ன? குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகும் துணை முதல்வர் தேஜஸ்வியை எப்படி இந்த பேரவைக்குள் அனுமதிக்கிறீர்கள்’’ என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு தேஜஸ்வி யாதவ் பதில் அளிக்கையில், ‘‘பிஹாரில் பாஜக ஆட்சி நீக்கப்படும் போது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது அந்தக் கட்சிக்கு வழக்கம். கடந்த 2017-ம் ஆண்டு இந்த வழக்கில் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துத. இரண்டாவது முறையாக இப்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இடைப்பட்ட 6 ஆண்டுகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? இந்த வழக்கை பொறுத்தவரையில் எந்த தவறும் என் மீதில்லை’’ என்றார். எனினும், பாஜக எம்எல்ஏ.க்கள் கூச்சலிட்டு கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE