யமுனையில் வரலாறு காணாத வெள்ளம்: டெல்லி மக்கள் பாதிப்பு; மத்திய அரசிடம் உதவி கோரிய கேஜ்ரிவால்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லியில் யமுனை ஆற்றில் வரலாறு காணாத அளவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. புதன்கிழமை மதிய நிலவரப்படி யமுனை ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ள நீர்மட்டத்தின் அளவு 207.55 மீட்டர் என்றளவில் இருந்தது. இது கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவாகும். கடைசியாக, 1978-ல் 207.49 மீட்டர் என்ற அளவில் யமுனையில் வெள்ளம் பாய்ந்துள்ளது.

புதிய உச்சத்தில் யமுனையில் வெள்ளம் பாய்வதால் தாழ்வான பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. வீடுகள், சந்தைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. யமுனை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பலர் தங்கள் வீடுகளின் மொட்டை மாடிகளில் தஞ்சமடைந்துள்ளனர். உடைமைகளுடன் அவர்கள் காத்திருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, கரையோர பகுதிகளில் வசிக்கும் டெல்லி மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

முதல்வர் கோரிக்கை: கோர முகம் காட்டும் பருவமழையின் ஒவ்வொரு நெருக்கடியையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக முதல்வர் கேஜ்ரிவால் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே 39 கம்பெனி தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் டெல்லியில் தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில் மீட்பு, நிவாரணம் தொடர்பாக முதல்வர் ஆலோசிக்க அவசர கூட்டத்தைக் கூட்டியிருந்தார். பின்னர் பேசிய அவர், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக தங்களின் வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றார். எதற்காகவும் காத்திருக்காமல் உடனே மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மக்கள் நலன் கருதி நிறைய நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் இன்னும் பல பள்ளி, கல்லூரிகளில் கூட நிவாரண முகாம்களாக மாற்றப்படும். நிவாரணப் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படுள்ளது என்றார். மேலும், மக்கள் கூட்டம் கூட்டமாக யமுனை ஆற்றின் கரையில் நின்று செல்ஃபி எடுக்கின்றனர். அவ்வாறு செய்ய வேண்டாம். திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் முதல்வர் எச்சரித்திருக்கிறார்.

மத்திய அரசிடம் உதவி: மேலும், யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள சூழலில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காணுமாறு முதல்வர் கேஜ்ரிவால் கோரியுள்ளார். இது தொடர்பாக கேஜ்ரிவால், "கடந்த இரண்டு நாட்களாக டெல்லியில் கனமழை இல்லை. ஆனாலும் யமுனை ஆற்றில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இன்றிரவு வெள்ள நீர்மட்ட 207.72 மீட்டர் என்றளவை எட்டும் என்று சிடபிள்யுசி கணித்துள்ளது. இது டெல்லிக்கு நல்ல செய்தி அல்ல. ஹரியாணாவில் இருந்து ஹத்னிகுண்ட் தடுப்பணையில் வெளியேற்றப்படும் நீரின் காரணமாகவே யமுனையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே இவ்விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

144 தடை உத்தரவு: இதற்கிடையில், டெல்லி போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையக யமுனை ஆற்றங்கரையோரத்தில் வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.

கடந்த மூன்று நாட்களாகவே டெல்லி யமுனை ஆற்றில் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. ஞாயிறு மதியம் 203.14 மீட்டராக இருந்த நீரில் அளவு திங்கள் மாலை 5 மணிக்கு 205.4 மீட்டர் என்று உயர்ந்தது. பின்னர் அன்றைய தினமே அபாய எல்லையான 205.33 மீட்டரைக் கடந்தது. இது கணிக்கப்பட்டதைவிட 18 மணி நேரம் முன்னதாகவே நிகழ்ந்தது.

மத்திய நீர்வள ஆணையத்தின் (CWC) இணையதளத்தில் இன்று காலை 4 மணியளவில் யமுனை ஆற்றில் நீரின் அளவு 207 மீட்டராக இருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.காலை 8 மணியளவில் இது 207.25 மீட்டர் அளவை எட்டியது. 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நீர் பாய்ந்து கொண்டிருக்கிறது.

காரணம் என்ன? - யமுனை ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட, நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை ஒரு காரணம். அதேபோல் தொடர் கனமழையால் மண் நீரை உள்வாங்கிக் கொள்ளும் உச்சபட்ச எல்லையைக் கடந்துவிட்டதும் காரணம். ஹரியாணாவில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரும் தடுப்பணைகளைக் கடந்து யமுனை ஆற்றில் கலப்பதும் இன்னொரு காரணம் என்று மத்திய நீர் வள ஆணைய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

டெல்லி, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் என்று வட மாநிலங்களை அச்சுறுத்திவரும் மழை தற்போது உத்தராகண்ட் பக்கம் திரும்பியுள்ளது. அங்கு பல இடங்களில் இன்று அதிகனமழை பெய்து வருகிறது. | வாசிக்க > வட மாநிலங்களில் கனமழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பு

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

44 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்