24 கட்சிகள், காங்கிரஸின் விருந்து... - எதிர்க்கட்சிகளின் பெங்களூரு கூட்டத்தில் என்ன ஸ்பெஷல்?

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வரும் 17,18 ஆகிய தேதிகளில் நடக்கும் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டத்தில் 24 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தி கலந்து கொள்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து விபரம் அறிந்தவர்கள் கூறும்போது, 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சிக்கு புதிதாக 8 கட்சிகள் ஆதரவு அளித்துள்ளதாக தெரிவித்தனர். அவர்களின் கூற்றுப்படி, "கடந்த மாதம் பிஹார் தலைநகர் பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகளின் முதல் ஆலோசனைக் கூட்டத்தினைத் தொடர்ந்து, பெங்களூருவில் நடக்கும் இரண்டாவது கூட்டத்தில் 24 கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்தக் கூட்டத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் (மதிமுக), கொங்கு தேச மக்கள் கட்சி (கொதேமக), விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக), புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி (ஆர்எஸ்பி) அனைத்து இந்திய ஃபார்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்), கேரள காங்கிரஸ் (ஜோசப்), கேரள காங்கிரஸ் (மணி) ஆகிய கட்சிகள் புதிதாக இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளன. பெங்களூரு கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தியும் கலந்து கொள்ள இருக்கிறார்.

இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சிகளின் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலேசானைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு முக்கியமான எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கடந்த மாதம் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் அழைப்பின் பெயரில் ஜூன் 23-ம் தேதி பாட்னாவில் நடந்த முதல் கூட்டத்தினை நினைவுகூர்ந்துள்ளார்.

கடிதத்தில் கார்கே கூறியிருப்பதாவது: நமது ஜனநாயக கொள்கைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க முடிந்ததாலும், அடுத்தப் பொதுத் தேர்தலை ஒற்றுமையாக எதிர்கொள்ள ஒருமனதான முடிவு எட்டப்பட்டதாலும் முதல் கூட்டம் வெற்றிகரமாக அமைந்தது. அந்த விவாதத்தை தொடர்வதும், நாம் உருவாக்கிய ஒற்றுமையை கட்டி எழுப்புவதும் மிகவும் முக்கியமானது என்று நான் கருதுகிறேன். நமது நாடு சந்திக்கும் சவால்களுக்கான தீர்வுகளுக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம்.

அதன் தொடர்ச்சியாக, ஜூலை 17-ம் தேதி பெங்களூருவில் நடக்கும் கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு நடக்கும் இரவு விருந்திலும் கலந்து கொள்ளுமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். கூட்டம் 18-ம் தேதி முற்பகல் 11 மணிக்கு மீண்டும் தொடங்கித் தொடரும். உங்கள் அனைவரையும் பெங்களூரு கூட்டத்தில் சந்திக்க ஆவலாக உள்ளேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சிக்கும் அழைப்பு: டெல்லியின் அதிகாரம் குறித்த மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் ஆதரவு குறித்து காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே முதல் கூட்டத்தில் வெளிப்படையாக கருத்து மோதல் ஏற்பட்ட நிலையில், இரண்டாவது கூட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ராஷ்டிரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பெங்களூரு செல்ல இருப்பதாக வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.

முதல் கூட்டம்: பிஹார் தலைநகர் பாட்னாவில் ஜூன் 23-ம் தேதி எதிர்க்கட்சிகளின் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அம்மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து, ஏற்பாடுகள் செய்திருந்தார். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழக முதல்வர் ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உட்பட 17 கட்சிகளை சேர்ந்த 32-க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

மாறிவிட்ட காட்சிகள்: பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகளின் முதல் ஆலோசனைக் கூட்டத்துக்கும், பெங்களூருவில் நடக்க இருக்கும் 2-வது கூட்டத்துக்கும் இடையிலான சுமார் ஒரு மாதகால இடைவெளிக்குள் தேசிய அரசியலில் சில பல காட்சி மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. குறிப்பாக மகாராஷ்டிராவில் சிவ சேனாவைத் தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேரந்த அஜித் பவாரின் கிளர்ச்சியால் அக்கட்சியும் சரத் பவார், அஜித் பவார் தலைமைகளில் இரண்டு அணிகளாக பிளவுபட்டுள்ளது. இருவரும் தாங்களே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்று கூறிவருகின்றனர்.

பாட்னா கூட்டத்தில் ஒருவராக அமர்ந்திருந்த அஜித் பவார் அணியைச் சேர்ந்த பிரஃபுல் பாட்டீல், தற்போது அந்தக் கூட்டத்தை கேலி செய்து வருவதுடன், அங்கு இருந்தவர்கள் அனைவருக்கும் தனித்தனிக் கொள்கைகள் இருந்ததால் தான் கூட்டத்தினை நகைச்சுவையாக உணர்ந்ததாக கூறிவருகிறார். எதிர்க்கட்சிகளை ஒரு அணியில் ஒருங்கிணைப்பதில் என்சிபியின் தலைவர் சரத் பவார் முக்கிய பங்கு வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், திரிணமூல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுள்ளது. பாட்னா கூட்டத்துக்கு முன்பாக, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து காங்கிரஸ் பலவீனமாக உள்ள மாநிலங்களில் பிராந்திய கட்சிகளுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்