பிரிஜ் பூஷனுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு - தொழில்நுட்ப ஆதாரங்களை வழங்கியது டெல்லி போலீஸ்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு புகாரினை எதிர்கொண்டுவரும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சிங்,பின்தொடருதல் மற்றும் துன்புறுத்துதல் ஆகிய குற்றங்களுக்காக விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படலாம் என்று டெல்லி போலீசாரின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக டெல்லி போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் முன்வைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆதாரங்கள் இதனை உறுதி செய்கின்றன. இந்த தொழில்நுட்ப ஆதாரங்களில் புகார்தாரர்களிடம் பிரிஜ் பூஷன் அதிக உரிமை எடுத்துக்கொள்வது போன்ற புகைப்படங்கள், சாட்சியளித்த ஒருவரின் சாட்சியினை உறுதிப்படுத்தும் பிரிஜ் பூஷனின் தொலைப்பேசி லோக்கேஷன், பாலியல் துன்புறுத்தல் சம்பவம் நடந்ததாக கூறப்படும் நிகழ்வில் பிரிஜ் பூஷன் இருந்ததற்கான புகைப்பட ஆதாரம் போன்றவை அடங்கும்.

முன்னதாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்-ன் மீது இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் உட்பட 6 பேர் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தனர். அவர்களின் குற்றச்சாட்டுகளின்படி டெல்லி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த குற்றப்பத்திரிகையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு அதிகாரிகள், பிரிஜ் பூஷன் மற்றும் புகார் அளித்த வீராங்கனைகள் வெளிநாட்டில் நடந்த விளையாட்டு போட்டியில் பங்கேற்றது தொடர்பான நான்கு புகைப்படங்களை டெல்லி போலீசாரிடம் வழங்கியுள்ளனர். இதில் இரண்டு படங்களில் புகார் அளித்த வீராங்கனைகளிடம் பிர்ஜ் பூஷன் அதிக உரிமை எடுத்துக்கொள்ளவது தெளிவாக தெரிகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரிஜ் பூஷன் பின்தொடர்தல் மற்றும் துன்புறுத்துதல் குற்றங்களுக்காக விசாரிக்கப்படலாம் மற்றும் தண்டிக்கப்படலாம் என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 21 பேர் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக தங்களின் வாக்குமூலத்தை அளித்துள்ளனர். அதில் 6 பேர் சிஆர்பிசி பிரிவு 164-ன் கீழ் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

நேரில் ஆஜராக சம்மன்: டெல்லி ரோஸ் அவனியூ நீதிமன்றம், "பிரிஜ் பூஷனுக்கு எதிரான இந்த வழக்கினை நடத்துவதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. அவர் ஜூலை 18-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்" என்று கடந்த வெள்ளிக்கிழமை சம்மன் அனுப்பியது.

ஆத்திரமடைந்த எம்பி: இந்த நிலையில், ஆங்கில ஊடகமொன்றின் நிருபர் ஒருவர், "நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வீர்களா?" என்று கேட்ட போது ஆத்திரமடைந்த எம்.பி., "நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்? என்னை ஏன் ராஜினாமா செய்யச் சொல்கிறீர்கள்?" என்று கேட்டார். தொடர்ந்து அந்ந நிருபர் பூஷனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை எடுத்துக்கூற முயன்ற போது அவரை "வாயை மூடு" என்றபடி எம்பி நிருபரைக் கடந்து சென்றார். பிரிஜ் பூஷனிடமிருந்து பதிலைப் பெற நிருபர் அவரைப் பின்தொடர்ந்து சென்றபோது, காரில் அமர்ந்திருந்த எம்.பி. நிருபரின் மைக்-ஐ கார் கண்ணாடியில் வைத்து நசுக்கினார்.

காங்கிரஸ் குற்றச்சாட்டு: இந்தச் சம்பவம் குறித்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிவி ஸ்ரீனிவாஸ், "மல்யுத்த வீராங்கனைகளை துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பாஜக எம்பி, காமிரா முன்னிலையில் பெண் நிருபர் ஒருவரை மிரட்டி, அவரது மைக்-ஐ உடைக்கிறார். இவ்வாறு பேசுவது யார்? இது யாருடைய பண்பு என்பதை குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி கூறுவாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி ஸ்வாதி மாலிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் மீண்டும் இதைச் சொல்கிறேன். பிரிஜ் பூஷன் ஒரு குண்டா. காமிராவின் முன்பாக ஒரு பெண் நிருபரிடம் தைரியமாக இப்படி நடந்து கொள்ள முடிகிறது என்றால், காமிரா இல்லாத இடங்களில் அவர் எப்படி எல்லாம் நடந்து கொண்டிருப்பார் என்பதை கற்பனை செய்து கொள்ளுங்கள். இவர் இருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை. நாடாளுமன்றம் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிரிஜ் பூஷன் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார் குறித்து பிரதமர் மோடியின் மவுனம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் கட்சி, இந்த அரசாங்கம் இந்தியாவின் மகள்களிடமிருந்து சோதனையைச் சந்திக்கிறது என்று கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட்,"பிரதமர் மோடி பாஜகவில் இருந்து பிரிஜ் பூஷன் சிங்கை எப்போது விலக்குவார், அவர் எப்போது கைது செய்யப்படுவார்" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

44 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்