சந்திரயான்-3 விண்கலத்தின் ஏவுதல் திட்ட ஒத்திகை வெற்றி - இஸ்ரோ அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: நிலவுக்கு அனுப்பப்படும் சந்திரயான்-3 விண்கலத்தின் ஏவுதலுக்கான திட்ட ஒத்திகை ஸ்ரீஹரிகோட்டாவில் வெற்றிகரமாக நடத்திமுடிக்கப்பட்டது.

நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-2 விண்கலத்தை 2019 ஜூலை 22-ம் தேதி விண்ணில் செலுத்தியது. பல்வேறு கட்ட பயணங்களுக்கு பின்பு சந்திரயான்-2 2019 செப்டம்பர் மாதம் நிலவின் சுற்றுப் பாதையை சென்றடைந்தது. எனினும், தொழில்நுட்பக் கோளாறால் திட்டமிட்டபடி லேண்டர் கலன் தரையிறங்காமல் நிலவில் மோதி செயலிழந்தது.

எல்விஎம்-3 ராக்கெட்: அதேநேரம் விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இதையடுத்து சந்திரயான்-3 விண்கலத்தை சுமார் ரூ.615 கோடியில் இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-ம் ஏவுதளத்தில் இருந்து ஜூலை 14-ம் தேதி மதியம் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகளில் விஞ்ஞானிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே சந்திரயான்-3 விண்கலத்தை ஏவுவதற்கான திட்ட ஒத்திகை நிகழ்வும் வெற்றிகரமாக நேற்று நடத்தி முடிக்கப்பட்டது. தொடர்ந்து ராக்கெட்டில் எரிபொருள் நிரப்புதல் போன்ற செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சந்திரயான்-3 விண்கலம் மொத்தம் 3,900 கிலோ எடைகொண்டது. இதில் 7 விதமானஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஏற்கெனவே ஆர்பிட்டர் நிலவை சுற்றிவருவதால் இந்த முறை லேண்டர், ரோவர் கலன்கள் மட்டும் அனுப்பப்படுகிறது. லேண்டர் மற்றும் ரோவர் கலன்கள் 14 நாட்கள் நிலவில் ஆய்வு மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE