புதுடெல்லி: அமலாக்கத் துறை இயக்குநரான சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக் காலத்தை மூன்றாவது முறையாக நீட்டித்தது சட்ட விரோதம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், மத்திய அரசின் பதவி நீட்டிப்பு ஆணையை ரத்து செய்தும், மிஸ்ரா ஜூலை 31-ஆம் தேதிக்குள் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் மிஸ்ராவின் பதவிக் காலம் நிறைவடைந்த பிறகு மூன்று முறை அவருக்கு மத்திய அரசு பதவி நீட்டிப்பு வழங்கி உள்ளது. இதை எதிர்த்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, மத்தியப் பிரதேச மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயா தாக்கூர், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலே ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில் நீதிபதிகள் விக்ரம் நாத், சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. கடந்த மே மாதம் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பினை ஒத்திவைத்தது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற அமர்வு, சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவி நீட்டிப்பு ஆணை, உச்ச நீதிமன்ற டிவிசன் பெஞ்சின் 2021 ஆண்டு தீர்ப்புக்கு முரணானது. அதில், மிஸ்ராவின் பதவியை நவம்பர் 2021-க்கு மேல் நீட்டிக்கக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. அமலாக்கத் துறை இயக்குநரின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் சட்டத்தினை இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு என்றாலும், கடந்த 2021-ஆம் ஆண்டு மிஸ்ரா பதவியில் நீடிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் சிறப்பு ஆணையிட்டிருக்கிறது என்று தெரிவித்தது. மேலும், வரும் ஜூலை 31-ம் தேதி வரை சஞ்சய் மிஸ்ரா பதவியில் இருக்கலாம் என்றும், அதற்கு அமலாக்கத் துறைக்கு புதிய இயக்குநரை நியமிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
சஞ்சய் குமார் மிஸ்ராவும் பதவி நீட்டிப்பு பின்னணியும்: 1984-ஆம் ஆண்டு பேட்சைச் சேர்ந்த இந்திய வருவாய்த் துறை அதிகாரியான சஞ்சய் குமார் மிஸ்ரா கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் முறையாக அமலாக்கத் துறை இயக்குநராக இரண்டு ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார். அவரது பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்பாக மிஸ்ராவுக்கு மேலும் ஓராண்டு பதவி நீட்டிப்பு வழக்கப்பட்டது. இதனை எதிர்த்து என்ஜிஓ ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் 2021-ஆம் ஆண்டு செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், மிஸ்ராவின் நீட்டிக்கப்பட்ட பதவிக் காலம் நிறைவடைய இரண்டும் மாதங்களே இருந்த நிலையில், அந்தப் பதவி நீட்டிப்பை ஏற்றுக்கொண்டது. இருந்தபோதிலும் மிஸ்ராவின் பதவிக் காலத்தை இனிமேலும் நீட்டிக்கக் கூடாது என்று தெளிவாக கூறியிருந்தது.
» மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: திரிணமூல் காங்கிரஸ் முன்னிலை
» தக்காளியை பாதுகாக்க பவுன்சர்களை நியமித்த சம்பவம்: உ.பி.யில் இருவர் கைது
இந்த நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பர் 15-ஆம் தேதி மத்திய அரசு, அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ-க்கு தலைவர்களை நியமிக்கும் சிவிசி சட்டம் மற்றும் டிஎஸ்பிஇ சட்டத்தில் திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்தது. அந்தத் திருத்தம் அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ தலைவர்களின் பதவி காலத்தை இரண்டு ஆண்டுகளில் இருந்து மேலும் ஓர் ஆண்டு நீட்டிக்கச் செய்து, மூன்றாண்டுகளாக மாற்ற வழிவகை செய்தது. இந்தப் புதிய திருத்தத்தின் மூலம் சஞ்சய் குமார் மிஸ்ரா நவம்பர் 2021-ல் இருந்து நவம்பர் 2022 வரை பதவி நீட்டிப்புச் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, ஓர் ஆணை மூலமாக அவரது பதவி காலம் நவம்பர் 2023 வரை மீண்டும் நீட்டிப்புச் செய்யப்பட்டது குறிப்பிடத்தகது.
இனி பதவி நீட்டிப்பு கிடையாது: இந்தத் திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன. திருத்தத்தினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தன. வழக்கு விசாரணையின்போது, ஒரு குறிப்பிட்ட நபருக்கு இதுபோல் தொடர்ந்து பதவி நீட்டிப்பு வழங்குவது அமைப்பின் தந்திரத்தை பாதிக்கும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. பதவி உயர்வின் மூலம் நிரப்பக் கூடிய பதவி இல்லை என்பதால், பதவி நீட்டிப்பு யாருடைய வாய்ப்பையும் பறிப்பதாகக் கருத முடியாது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
அப்போது, ஒரு குறிப்பிட்ட நபரின் பதவிக் காலத்தை மீண்டும் மீண்டும் நீட்டிப்பதன் காரணம் என்ன? அந்த ஒரு நபரால் மட்டுமே அந்தப் பதவிக் குரிய கடமையை செய்ய முடியுமா? வேறு யாராலும் செய்ய முடியாதா? அவர் ஓய்வு பெற்ற பிறகு அந்த பதவியின் நிலை என்னாகும்? என அடுக்கடுக்காக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, "அமலாக்கத் துறை இயக்குநராக இருக்கும் சஞ்சய் மிஸ்ராவின் பதவிக் காலம் வரும் நவம்பர் மாதத்தோடு முடிவடைகிறது. அதன் பிறகு அவரது பதவிக் காலம் நீட்டிக்கப்பட மாட்டாது" என மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago