புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 74,000 உள்ளாட்சிப் பதவிகளுக்கான வாக்குகள் எண்ணும் பணிகள் பலத்த பாதுகாப்புகளுடன் இன்று காலையில் தொடங்கியது. தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2018-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் முடிந்த நிலையில், மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. இதற்காக கடந்த 8-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் வன்முறை நடைபெறலாம் என கணித்திருந்த தேர்தல் ஆணையம், மத்தியப் படைகளை வரவழைத்திருந்தது. இருந்தும், அந்த மாநிலத்தில் தேர்தலின்போது நடந்த வன்முறையால் 696 வாக்குச்சாவடிகளில் திங்கள்கிழமை மறு வாக்குப்பதிவு நடைபெற்றது.
அதனைத் தொடந்து, இன்று (செவ்வாய்க்கிழமை) பலத்த பாதுகாப்புடன் காலை 7 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, "மாநிலத்தின் 22 மாவட்டங்களில் 339 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்த வாக்கு எண்ணிக்கை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கலாம்" என்று தெரிவித்தனர். அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் மத்திய மற்றும் மாநில படை போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர். தேவையற்ற அசம்பாவிதங்களை தவிர்க்க, வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு முன்பாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் முன்னிலை: முதல்கட்ட வாக்கு எண்ணிக்கையில் கிராம பஞ்சாயத்துக்கான இடங்களில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 3,068 இடங்களிலும், பாஜக 1,151 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 460 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 168 இடங்களிலும் முன்னிலையில் இருப்பதாக மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல், திரிணமூல் காங்கிரஸ் 28 கிராம சமிதி இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
ஆளுநர் எச்சரிக்கை: இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி இருக்கும் நிலையில், வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு மாநில ஆளுநர் சிவி ஆனந்த போஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறுகையில், "மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் வன்முறைக்கு எதிராக தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. களத்தில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மிகவும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். குண்டர்கள் மற்றும் சட்டத்தை மீறுபவர்களை அனைத்து அதிகாரிகளும் இரும்புக்கரம் கொண்டு அடக்குவார்கள்" என்று தெரிவித்தார்.
தடியடி: ஹவுராவில் உள்ள ஒரு வாக்கு எண்ணும் மையத்துக்கு முன்பாக கூடியிருந்த மக்கள் கலைந்து செல்வதற்காக பாதுகாப்பு படையினர் லேசான தடியடி நடத்தினர். மக்கள் வாக்கு எண்ணும் மையத்துக்குள் நுழைய முயன்றதாக கூறப்படுகின்றது.
சேவைகள் பாதிப்பு: உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்காக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊருக்குச் சென்றனர். அவர்கள் இன்னும் திரும்பாததால் கொல்கத்தாவில் போக்குவரத்து மற்றும் உணவு சேவைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
அசாம் முதல்வர் ட்வீட்: இதற்கிடையில், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று நடந்த பஞ்சாயத்துத் தேர்தலில் ஏற்பட்ட வன்முறை காரணமாக தங்களின் உயிர் பயம் காரணமாக அசாமில் தஞ்சம் புகுந்துள்ள 133 பேர் துப்ரி மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலும் வன்முறையும்: மேற்கு வங்கத்தில் 3 அடுக்கு உள்ளாட்சித் தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, ஊரகப் பகுதிகளில் 73,887 இடங்களில் வாக்குப்பதிவு நடந்தது. 22 மாவட்டங்களில் 928 உறுப்பினர்கள், 9,730 பஞ்சாயத்து சமிதிகள், 63,229 கிராம ஊராட்சி உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான இந்தத் தேர்தலில், 2.06 லட்சம் பேர் போட்டியிட்டனர். 5.67 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.
அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த உள்ளாட்சித் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. உள்ளாட்சி நிர்வாகத்தைக் கைப்பற்ற ஆளும் திரிணமூல் காங்கிரஸ், பாஜக, இந்திய மதச் சார்பற்ற முன்னணி (ஐஎஸ்எஃப்) ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.
தேர்தலையொட்டி 65,000 மத்திய பாதுகாப்புப் படை வீரர்களும், மாநில போலீஸார் 70 ஆயிரம் பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். எனினும், வாக்குப் பதிவு தொடங்கியது முதல், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.
பிர்பும் பகுதியில் உள்ள வாக்குச் சாவடி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. பல இடங்களில் வாக்குச்சாவடிகள் சூறையாடப்பட்டு, வாக்குப் பெட்டிகளும் சேதப்படுத்தப்பட்டன. வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில், ஒரு கும்பல் வாக்குச்சாவடியை கைப்பற்ற முயன்றது. அப்போது நாட்டு வெடிகுண்டு வீசியதில் 62 வயது முதியவர் உயிரிழந்தார். முர்சிதாபாத் வாக்குச் சாவடியில் திரிணமூல் காங்கிரஸ், பாஜக ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டதால், வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது. சிந்த்ராணியில் உள்ள வாக்குச்சாவடியில், வாக்குப் பெட்டிக்குள் சிலர் தண்ணீரை ஊற்றினர். மால்டா மாவட்டம் இங்கிலிஷ் பஜார் பகுதியில் உள்ள இரு வாக்குச் சாவடிகள் மீது கற்கள் வீசப்பட்டன.
வன்முறை காரணமாக திரிணமூல் கட்சியைச் சேர்ந்த 6 பேர், பாஜக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் ஐஎஸ்எஃப் கட்சிகளைச் சேர்ந்த தலா ஒருவர் உயிரிழந்தனர். உயிரிழந்த மற்றொரு நபர் எந்தக் கட்சியை சேர்ந்தவர் எனத் தெரியவில்லை. வாக்குப்பதிவு முடிந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 14-ஆக உயர்ந்தது. மேலும் பலர் காயமடைந்தனர்.
கடந்த மாதம் 8-ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே, பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நேரிட்டன. இதுவரை மொத்தம் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 17 பேர் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
வன்முறை குறித்து பாஜக - திரிணமூல் கருத்து: பாஜக பிரமுகர் ராகுல் சின்ஹா கூறுகையில், "உள்ளாட்சித் தேர்தலை வன்முறை சிதைத்துவிட்டது. தேர்தல் என்ற பெயரில் கேலிக் கூத்து நடத்துகிறார்கள். தேர்தல் ஆணையமும் ஆளுங்கட்சியும் இணைந்து எல்லா முடிவுகளையும் எடுக்கும்போது திரிணமூல் கட்சியினர் இப்படித்தான் பூத்களை கைப்பற்றுவார்கள், வாக்குப் பெட்டிகளை தூக்கிச் செல்வார்கள். இது மக்களுக்கான தேர்தல் என்று நிச்சயமாகக் கூற முடியாது" என்றார்.
ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியோ, “கூடுதல் மத்தியப் படைகளைக் கோரியிருந்தோம். ஆனால், அவர்கள் வந்தபாடில்ல. வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதற்கு எதிர்க்கட்சிகளின், குறிப்பாக பாஜகவின் சதியே காரணம்” என்று கூறியிருந்தது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
12 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago