டெல்லியில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம் - கொட்டும் மழையிலும் தர்ணாவில் பங்கேற்ற கனிமொழி எம்.பி

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உதவித்தொகையை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் மாற்றுத்திறனாளிகள் நடத்திய போராட்டத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மாற்றத்திறனாளிகளும், திமுக எம்.பி. கனிமொழியும் பங்கேற்றனர்.

கடந்த 11 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.300 மட்டும் மத்திய அரசு இந்திராகாந்தி உதவித்தொகை எனும் பெயரில் வழங்கி வருகிறது. இதனை ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016ஐ முழுமையாக அமல்படுத்த வேண்டும், பல்நோக்கு அடையாள அட்டையை (யுடிஐடி) முகாம் நடத்தி நாடு முழுவதும் சீராக வழங்க வேண்டும், அதுவரை பயன்கள் பெற யுடிஐடி-யை நிபந்தனை ஆக்கக் கூடாது. 100 நாள் வேலை திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும், வேலை நாட்களை 150 ஆக அதிகரிக்க வேண்டும், தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லி ஜந்தர்மந்தரில் நேற்று நடைபெற்ற இந்த தர்ணாவில் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். என்பிஆர்டி என்னும் ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசியமேடை சார்பில் இப்போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் பங்கேற்றனர்.

இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் அகில இந்திய தலைவர் கிரீஷ் கீர்த்தி தலைமை வகித்தார். ஊனமுற்றோர் உரிமைகளுக்கான என்பிஆர்டியின் செயல் தலைவர் எஸ்.நம்புராஜன், பொருளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி, பொதுச்செயலாளர் வி.முரளீதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தின்போது கனமழை பெய்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நடைபெற்ற இந்த தர்ணாவில் திமுகவின் கனிமொழி எம் பி, முன்னாள் மத்திய அமைச்சரும் டெல்லி காங்கிரஸின் மூத்த தலைவருமான அஜய் மக்கான், என்பிஆர்டி நிர்வாகிகளான ஜான்சிராணி, அனிபென் முகர்ஜி, ரிஷிகேஷ் ரஜளி, அதுவய்யா, கைரளி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். அகில இந்திய விவசாயிகள் சங்க மதிப்புறு தலைவர் ஹன்னன் முல்லா, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகி சோனியா, இந்திய மாணவர் சங்க தலைவர் ஆதர்ஷ், மாற்றுத்திறனாளிகள் தேசிய ஒருங்கிணைப்புக்குழு தலைவர் அர்மன் அலி ஆகியோரும் உரை நிகழ்த்தினர். கொட்டும் மழையைப் பொருட்படுத்தாது இதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகளும், அவர்களுக்கு நேரில் ஆதரவு தெரிவிக்க வந்த தலைவர்களும் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

மத்திய அரசு அதிகாரிகளிடம் மனு: போராட்டத்தின் இறுதியில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மத்திய அரசு அதிகாரிகளுடன் என்பிஆர்டி தலைவர்கள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இந்த சந்திப்பில், சங்கத்தின் தலைவர்கள் கிரீஸ் கீர்த்தி, வி.முரளிதரன், எஸ்.நம்புராஜன், அனிபென் முகர்ஜி, பா.ஜான்சி ராணி, வெங்கட் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். மாற்றுத்திறனாளிகள் நலத் துறை செயலாளர் ராஜேஷ் அகர்வால் இவர்களிடம் இருந்து மனுவை பெற்றுக் கொண்டார். கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவை என்பதை ஏற்றுக் கொண்ட அவர், பல்வேறு துறைகள் தொடர்புடையவை என்பதால் சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளுடன் பேசி தீர்வு காணலாம் என தெரிவித்தார். அப்போது துறையின் இணைச் செயலாளர் ராஜேஷ் குமாரும் உடன் இருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE