டெல்லியில் யமுனை ஆற்றில் வெள்ளப் பெருக்கு - நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்படும் கரையோர மக்கள்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லியில் யமுனை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் 205.33 மீட்டர் என்ற அபாய கட்டத்தைத் தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கேரளாவில் தொடங்கிய இந்த பருவமழை, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், டெல்லி என நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, வடக்கு-வடமேற்கு இந்தியா, மத்திய இந்தியா, தெற்கு தீபகற்பம் ஆகிய பகுதிகளில் கடந்த 2ம் தேதியில் இருந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த ஜூன் 29ஆம் தேதி முதல் ஜூலை 5ஆம் தேதி வரையிலான ஒருவார காலத்தில் வடக்கு-வடமேற்கு மாநிலங்களில் வழக்கத்தைவிட 28 சதவீதம் அளவுக்கும், மத்திய இந்தியாவில் 20 சதவீதம் அளவுக்கும், தெற்கு தீபகற்பத்தில் 17 சதவீதம் அளவுக்கும் கூடுதலாக மழை பதிவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேசிய அளவில் சராசரியாக 16 சதவீதம் அளவுக்கு மழை பதிவாகி இருக்கிறது.

வட இந்தியாவின் டெல்லி, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக தலைநகர் டெல்லியில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்பதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. பல்வேறு சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. பேருந்து மற்றும் ரயில் சேவைகளிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் ஓடும் யமுனை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஆற்றில் தற்போது 206.24 மீட்டர் உயரத்துக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் அபாய அளவு 205.33 மீட்டர். அபாய அளவைத் தாண்டி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சில இடங்களில் 207.49 மீட்டர் அளவுக்கும் வெள்ளப்பெருக்கு உள்ளது. வெள்ளப் பெருக்கு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ், "கடந்த 8, 9, 10 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை காரணமாக நகரின் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. யமுனா ஆற்றில் வெள்ளம் அபாய கட்டத்தைத் தாண்டி பாய்ந்தோடுவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசு முழு எச்சரிக்கையுடன் இருக்கிறது. கரையோர மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை நிவாரண முகாம்களில் தங்க வைப்பதற்கானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. யமுனை ஆற்றில் வெள்ளம் அபாய கட்டத்தை நாங்கள் கணித்ததைவிட ஒரு நாள் முன்பாகவே எட்டி விட்டது. ஹரியானாவில் இருந்து அதிக அளவில் வெள்ள நீர் வருவதே இதற்குக் காரணம்" என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE