புதுடெல்லி: வடமாநிலங்களில் பெய்துவரும் வரலாறு காணாத கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
டெல்லி, ஹரியாணா, பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தராகண்ட், இமாச்சல், காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. டெல்லியில் ஒரே நாளில் 15.3 சென்டி மீட்டர் மழை பதிவானது. இது 41 ஆண்டுகளில் இல்லாத அளவு (ஜூலை மாதத்தில்) ஆகும்.
இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. யமுனை ஆற்றில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்கிறது. மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லி, குருகிராம் உட்பட வடமாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
இமாச்சலில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, அங்கு 7 மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் ஓடும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குல்லு நகருக்கு அருகே ஓடும் பீஸ் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதுபோல பாலங்கள், நெடுஞ்சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இம்மாநிலத்தில் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் தொடர்பான விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்.
கனமழை காரணமாக ரயில் சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 17 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் 12 ரயில்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் உள்ளூர் நிர்வாகத்தினருடன் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சூழ்நிலையில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது வெள்ள பாதிப்பு குறித்து அதிகாரிகள் பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தனர்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழை குறித்து பிரதமர் மோடி, மூத்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். உள்ளூர் நிர்வாகம், தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படையினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.
வீட்டிலேயே இருங்கள்.. இமாச்சல பிரதேசத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று முன்தினம் தெரிவித்தது. இந்நிலையில், இமாச்சலின் பிலாஸ்பூர், சோலன், சிம்லா, சிர்மார், உனா, ஹமிர்பூர், மண்டி மற்றும் குல்லு ஆகிய பகுதிகளில் மிதமானது முதல் மிக கனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.
இதுகுறித்து இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு நேற்று ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். கனமழை காரணமாக நிலச்சரிவு, வெள்ளம் மற்றும் இதர பாதிப்பு ஏற்பட்டால் 1100, 1070 மற்றும் 1077 என்ற உதவி எண்களில் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம். வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து வருகிறது. அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் தங்கள் தொகுதிக்குச் சென்று பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago