மாநிலங்களவைத் தேர்தலில் குஜராத்தில் இருந்து போட்டியிட மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் வேட்பு மனு தாக்கல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மாநிலங்களவைத் தேர்தலில் குஜராத் மாநிலத்தில் இருந்து போட்டியிடுவதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

கோவா, குஜராத், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 11 பேரின் பதவிக்காலம் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் முடிவடைய உள்ளது. இதில் மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன், கோவாவைச் சேர்ந்த வினய் டெண்டுல்கர் உள்ளிட்டோரும் அடங்குவர்.

இதனை தொடர்ந்து, காலியாகவுள்ள அந்த 11 மாநிலங்களவை இடங்களுக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கு தேர்தல் நடத்துவது என தேர்தல் ஆணையம் முடிவு செய்து உள்ளது. இதன்படி, கோவா, குஜராத் மற்றும் மேற்கு வங்கத்தில் காலியாகவுள்ள 11 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரும் 24-ம் தேதி நடத்தப்படும் என தலைமை தேர்தல்ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

மத்திய அமைச்சரான எஸ். ஜெய்சங்கரின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 18-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

காந்திநகரில் இருந்து: இந்நிலையில், மத்திய வெளி விவகார அமைச்சரான ஜெய்சங்கர் குஜராத்தின் காந்தி நகரில் இருந்து வேட்பு மனு தாக்கல் செய்ய முடிவு செய்தார். அவர் நேற்று காந்தி நகரில் தேர்தல் அதிகாரி ரிதா மேத்தாவிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், பாஜக மாநிலத் தலைவர் சி.ஆர். பாட்டீல் உள்ளிட்டோர் உடனிருந்தனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் இருந்துதான் மாநிலங்களவைக்கு மத்திய அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

13-ம் தேதி கடைசி நாள்: மொத்தம் 11 இடங்களுக்குவேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வரும் 13-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 24-ம் தேதி நடத்தப்படும். காலி யாகும் 11 இடங்களில் 8 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள். 3 பேர் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE