சட்டம், ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் - மணிப்பூர் அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மணிப்பூரில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி சமூகத்தினருக்கும் இடையேகடந்த மே 3-ம் தேதி மோதல்ஏற்பட்டது. சுமார் 2 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் கலவரத்தில் இதுவரை 142 பேர் உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 65,000 பேர்வீடுகளை இழந்து அகதிகளாகி உள்ளனர். இதுவரை 5,995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த சூழலில் கலவரத்தை கட்டுப்படுத்தக் கோரி பல்வேறு அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி நரசிம்மா அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

மணிப்பூர் பழங்குடி கூட்டமைப்பு சார்பில் மூத்த வழக்கறிஞர் காலின் கொன்சால்வஸ் ஆஜரானார். அவர் கூறும்போது, “மாநில அரசின் ஆதரவுடன் குகி சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது" என்று குற்றம் சாட்டினார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி சந்திரசூட், “வன்முறையை தூண்டும் களமாக உச்ச நீதிமன்றத்தை பயன்படுத்தக் கூடாது. கலவரத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை மட்டுமே வழங்க வேண்டும்" என்று அறிவுறுத்தினார்.

மணிப்பூர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், “மணிப்பூரில் 10 கி.மீ. தொலைவு நெடுஞ்சாலையை போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதன் காரணமாக மாநிலத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. பெட்ரோல், டீசல், உணவு பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது’’ என்று தெரிவிக்கப்பட்டது.

மத்திய, மாநில அரசுகளின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும்போது, ‘‘மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன’’ என்று தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி நரசிம்மா கூறியதாவது: உச்ச நீதிமன்றத்துக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது. ஆனால் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பணியை நாங்கள் மேற்கொள்ள முடியாது. கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை.

நாங்கள் மக்களின் பக்கம் நிற்கிறோம். இது மிகப்பெரிய மனிதாபிமான பிரச்சினை. வன்முறையை தூண்டும் வகையில் யாரும் செயல்படக்கூடாது. மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்முறையில் ஈடுபடும் குழுவினரிடம் இருந்து ஆயுதங்களைக் கைப்பற்ற வேண்டும். மணிப்பூரின் தற்போதைய நிலை குறித்து மாநில தலைமைச் செயலாளர் வினீத் ஜோஷி விரிவான மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.

மாநிலத்தில் இணைய சேவையைத் தொடங்க மணிப்பூர் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனால் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் என்று மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விவகாரம் குறித்து செவ்வாய்க்கிழமை விசா ரணை நடத்தப்படும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE