வட மாநிலங்களில் கனமழை, வெள்ள பாதிப்பு: 22 பேர் உயிரிழப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்

By செய்திப்பிரிவு

ஷிம்லா: வட மாநிலங்களில் கனமழை, வெள்ள பாதிப்புகளால் இதுவரை 22 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பஞ்சாப்பில் பல பகுதிகளில் மழை மீட்பு, நிவாரணப் பணிகளில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசம், டெல்லி, ஹரியாணா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இயல்பு வாழ்ககை முடங்கியுள்ளது.

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் வரலாறு காணாத மழை பெய்து 14 உயிர்கள் பறிபோன நிலையில், அடுத்த 24 மணி நேரத்துக்கு பொதுமக்கள் வீடுகளிலேயே பத்திரமாக இருக்குமாறு முதல்வர் சுக்வீந்தர் சிங் சுகு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜூன் 1 ஆம் தேதி தொடங்கிய தென் மேற்கு பருவமழை காலத்திலிருந்து இதுவரை டெல்லி, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் மாவட்டங்களில் தலா 112%, 100%, 70% அதிகமாக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

மோசமாக பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேசம்: மலைப் பிரதேசமான இமாச்சல பிரதேசத்தில் சிம்லா, குலு, மண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் நேற்று மட்டும் 13 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. 9 இடங்களில் காட்டாற்று வெள்ளத்தில் வீடுகள், உடைமைகள் அடித்துச் செல்லப்பட்டன. சிம்லாவில் வீடு இடிந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். குலு, சம்பா பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் 2 பேர் என மொத்தம் இதுவரை மாநிலத்தில் மழை, வெள்ள, நிலச்சரிவு பாதிப்புகளில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்.

இமாச்சல பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் காட்டாற்று வெள்ளத்தில் வாகனங்கள் இழுத்துச் செல்லப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. கனமழை தொடர்வதால் இமாச்சல பிரதேசத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

முதல்வர் வேண்டுகோள்: இந்நிலையில், முதல்வர் சுக்வீந்தர் சிங் சுகு, "இந்த இயற்கைப் பேரிடரை மக்கள் இணைந்தே எதிர்கொள்ள வேண்டும். அடுத்த 24 மணி நேரத்துக்கு மக்கள் வீடுகளிலேயே இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று காணொலி காட்சி வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் மக்கள் மழை, வெள்ளம், நிலச்சரிவு தொடர்பான புகார்களுக்கு மற்ற உதவிகளுக்கு 1100, 1070 மற்றும் 1077 ஆகிய உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

எம் எல் ஏக்களுக்கு உத்தரவு: முதல்வர் அந்த வீடியோவில், அந்தந்த தொகுதி எம் எல் ஏக்கள் மக்களுக்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் உதவ வேண்டும். இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையில், மாநிலத்தின் 13 மாவட்டங்களில் 10 மாவட்டங்களுக்கு இன்று (ஜூலை 10) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் முதல்வர் அறிவுறுத்தல்: பஞ்சாம் மாநிலத்திலும் பருவமழை தீவிரம் கண்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். அதேவேளையில் மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் அரசு மக்களுக்கு துணை நின்று எல்லா வகையிலும் உரிய உதவிகளைச் செய்யும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். மேலும் எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதிகளில் எங்கெல்லாம் கனமழை வெள்ளத்துக்கு வாய்ப்புள்ளதோ அங்கெல்லாம் மக்களை முன் கூட்டியே எச்சரித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

டெல்லியில் இருவர் உயிரிழப்பு: தலைநகர் டெல்லியில் கடந்த 1982-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி 17 செ.மீ. மழை பதிவானது. அதன் பிறகு டெல்லியில் நேற்று ஒரே நாளில் 15.3 செ.மீ. மழை பெய்துள்ளது. 41 ஆண்டுகளுக்கு பிறகு பதிவான அதிகபட்ச மழை இதுவாகும். டெல்லி சப்ஸி மண்டி பகுதியில் சுற்றுச்சுவர் இடிந்துவிழுந்து இளம் பெண் ஒருவரும், டெல்லி ரோஹிணி பகுதியில் மரம் விழுந்து ஆட்டோ ஓட்டுநர் ஒருவரும் உயிரிழந்தனர்.

ஹரியாணாவில் இருந்து யமுனை ஆற்றின் ஹத்திகுண்ட் தடுப்பணையில் விநாடிக்கு ஒரு லட்சம் கன அடி தண்ணீர் விடுவிக்கப்பட்டுள்ளதால் டெல்லிக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை அரசு நேற்றே வெளியிட்டது. யமுனாவில் நாளை செவ்வாய்க்கிழமை வெள்ளம் கரை புரண்டோடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் யமுனை ஆற்றில் டெல்லி பொதுப் பணித் துறை அமைச்சர் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

வட மாநிலங்களை மழை வெள்ளம் வாட்டி வதைப்பதால். அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் இதுவரை 22 பேர் மழை, வெள்ள பாதிப்புகளால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்