ஆள் எடுக்கும் நிறுவனங்கள் மூலம் 500 அடியாட்கள் சேர்ப்பு: டெல்லி போலீஸாரிடம் பிஷ்னோய் கும்பல் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பஞ்சாபின் பெரோஸ்பூரை சேர்ந்தவர் லாரன்ஸ் பிஷ்னோய் (30). ஹரியாணா காவலர் மகனான லாரன்ஸ், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்துள்ளார். கல்லூரி காலங்களில் மாணவர் பேரவை அரசியலில் தலையிட்டவருக்கு நண்பராக மாறினார் கோல்டி பிரார் எனும் சத்தீந்தர் சிங். 2010-ல் பட்டம் பெற்ற பின் சண்டிகரில் இருவரும் இணைந்து பல்வேறு குற்றங்களில் ஈடுபடத் துவங்கினர். இருவர் மீதும் கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி போன்ற 7 வழக்குகள் 2012 வரை பதிவாகின. இதற்காக கைதான பிஷ்னோய் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறை வாழ்க்கையில் அவர் தாதாவாக மாறினார். அங்கிருந்த சக கைதிகளின் நட்பை பெற்றவர் விடுதலையாகி ஆயுதக் கடத்தலில் இறங்கினார். அப்போது, தன்னுடன் மோதிய முக்ஸ்தர் என்பவரை சுட்டுக் கொலை செய்தார் பிஷ்னோய்.

பிறகு மது கடத்தலிலும் இறங்கியவர் தன் தலைமையில் ஒரு கும்பலை உருவாக்கினார். 2014-ல் ராஜஸ்தான் போலீஸாருடனான என்கவுன்ட்டரில் மீண்டும் கைதான பிஷ்னோய் மீது சிறையினுள் முக்கிய சாட்சியை கொலை செய்த வழக்கும் பதிவானது. சிறையில் சம்பத் நெஹரா எனும் குற்றவாளியுடன் நட்பு கொண்டு தனது கும்பலின் நடவடிக்கைகளை ராஜஸ்தானிலும் பரப்பினார்.

பிஷ்னோய் சமூகத்தினர் மான் உள்ளிட்ட விலங்குகளை புனிதமாகக் கருதுபவர்கள். இதனால், மான் வேட்டையில் சிக்கிய பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொல்லவும் பிஷ்னோய் தன் நண்பர் சம்பத் நெஹரா மூலமாக முயற்சித்திருந்தார். 2018-ல் வெளியான இந்த தகவலால்தான் பிஷ்னோய் கும்பல் பற்றி வெளி உலகுக்கு தெரியத் துவங்கியது. பிறகு டெல்லியில் ஒரு கொலை மிரட்டல் வழக்கிலும் சிக்கிய பிஷ்னோய், திஹார் சிறைக்கு மாற்றப்பட்டார். அப்போது முதல் அவர் சிறையிலிருந்தபடியே பல்வேறு குற்றங்களில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது.

கடந்த வருடம் மே 29-ல் பஞ்சாபில் பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா சுட்டுக் கொல்லப்பட்டார். அடுத்த சில மணி நேரங்களில் தனது நண்பர் பிஷ்னோய் கும்பலின் உதவியால் சித்துவை சுட்டுக் கொன்றதாக கோல்டி பிரார்தன் முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இதையடுத்து என்கவுன்ட்டரில் கொல்லப்படுவோம் என்ற பயத்தில் பிஷ்னோய் டெல்லி நீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்டு வழக்கு தொடுத்துள்ளார்.

இந்நிலையில், பிஷ்னோய் கும்பலின் முக்கிய உறுப்பினரான நரேஷ் ஷெட்டி டெல்லி போலீஸாரிடம் சிக்கியுள்ளார். இவரிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதில் அவர் பிஷ்னோய் கும்பலில் வேலை செய்ய அடியாட்களை தேர்வு செய்யும் நிறுவனங்கள் மூலம் சேர்த்ததாகக் கூறியுள்ளார். முதல்முறை குற்றம் செய்து சிறைக்கு வரும் இளைஞர்களிடமும் பேசி பிஷ்னோய் கும்பலில் சேர்த்ததாகவும் ஷெட்டி தெரிவித்துள்ளார். இவ்வாறு சேர்ந்தவர்கள் 500 பேர் பிஷ்னோய் கும்பலுக்காக நாட்டின் பல பகுதிகளில் செயல்படுவதாகக் கருதப்படுகிறது.

பல மாநிலங்களில் குற்றங்கள் செய்த பிஷ்னோய் கும்பலுக்கு வெளிநாடுகளிலும் தொடர்புகள் உள்ளன. கோல்டி பிரார் லண்டனில் இருந்தபடி செயல்படுகிறார். நரேஷின் சகோதரி மகனான அக்‌ஷய் கலிபோர்னியாவில் இருந்தும் கொலை மிரட்டல்கள் விடுத்து பலகோடிகள் பெற்று வருவதாகத் தெரிந்துள்ளது. இவர்களுடனான தனது சர்வதேசக் கும்பலுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் சிறையில் இருந்தபடி சிறை காவலர்கள் உதவியால் போனில் உத்தரவிடுவதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

20 முக்கிய குற்றவாளிகள்

எனவே, லாரன்ஸ் பிஷ்னோய் உள்ளிட்ட 20 முக்கிய குற்றவாளிகளை அந்தமான் அல்லது வடகிழக்கு மாநில சிறைகளுக்கு மாற்ற திஹார் சிறை அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

இதைப் பெற்ற மத்திய உள்துறை அமைச்சகம் அவர்களை மாற்றுவது குறித்தும் ஆலோசித்து வருகிறது. சர்வதேச தொடர்பினால், பிஷ்னோய் கும்பலின் வழக்குகள் தேசிய புலனாய்வு நிறுவனத்துக்கும் (என்ஐஏ) மாற்றி விசாரிக்கப்பட்டு வருகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE