மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் பதற்றம் - குண்டுவீச்சு, வன்முறைக்கு 14 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பயங்கர வன்முறை ஏற்பட்டது. வாக்குச்சாவடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர்.

மேற்கு வங்கத்தில் 3 அடுக்கு உள்ளாட்சித் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, ஊரகப் பகுதிகளில் 73,887 இடங்களில் வாக்குப்பதிவு நடந்தது. 22 மாவட்டங்களில் 928 உறுப்பினர்கள், 9,730 பஞ்சாயத்து சமிதிகள், 63,229 கிராம ஊராட்சி உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான இந்த தேர்தலில், 2.06 லட்சம் பேர் போட்டியிட்டனர். 5.67 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

2018-ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 34 சதவீத இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் போட்டியின்றி வென்றது. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த உள்ளாட்சித் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. உள்ளாட்சி நிர்வாகத்தைக் கைப்பற்ற ஆளும் திரிணமூல் காங்கிரஸ், பாஜக, இந்திய மதச் சார்பற்ற முன்னணி (ஐஎஸ்எஃப்) ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது.

தேர்தலையொட்டி 65,000 மத்திய பாதுகாப்புப் படை வீரர்களும், மாநில போலீஸார் 70 ஆயிரம் பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். எனினும், வாக்குப் பதிவு தொடங்கியது முதல், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.

பிர்பும் பகுதியில் உள்ள வாக்குச் சாவடி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. பல இடங்களில் வாக்குச்சாவடிகள் சூறையாடப்பட்டு, வாக்குப் பெட்டிகளும் சேதப்படுத்தப்பட்டன. வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில், ஒரு கும்பல் வாக்குச்சாவடியை கைப்பற்ற முயன்றது. அப்போது நாட்டு வெடிகுண்டு வீசியதில் 62 வயது முதியவர் உயிரிழந்தார். முர்சிதாபாத் வாக்குச் சாவடியில் திரிணமூல் காங்கிரஸ், பாஜக ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டதால், வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது. சிந்த்ராணியில் உள்ள வாக்குச்சாவடியில், வாக்குப் பெட்டிக்குள் சிலர் தண்ணீரை ஊற்றினர். மால்டா மாவட்டம் இங்கிலிஷ் பஜார் பகுதியில் உள்ள இரு வாக்குச் சாவடிகள் மீது கற்கள் வீசப்பட்டன.

வன்முறை காரணமாக திரிணமூல் கட்சியைச் சேர்ந்த 6 பேர், பாஜக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் ஐஎஸ்எஃப் கட்சிகளைச் சேர்ந்த தலா ஒருவர் உயிரிழந்தனர். உயிரிழந்த மற்றொரு நபர் எந்தக் கட்சியை சேர்ந்தவர் எனத் தெரியவில்லை. வாக்குப்பதிவு முடிந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 14-ஆக உயர்ந்தது. மேலும் பலர் காயமடைந்தனர்.

மாநில ஆளுநர் அனந்த போஸ், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு, காயமடைந்தவர்கள் மற்றும் வாக்காளர்களை சந்தித்துப் பேசினார். குண்டு வீச்சில் காயமடைந்து முர்சிதாபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை, மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்திரி சந்தித்து ஆறுதல் கூறினார்.

கடந்த மாதம் 8-ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே, பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நேரிட்டன. இதுவரை மொத்தம் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 17 பேர் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திரிணமூல் காங்கிரஸ் பிரச்சாரத்தை முதல்வர் மம்தா பானர்ஜி, கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி வழிநடத்தினர்.

தேர்தல் வன்முறை, பிரச்சினைகள் மற்றும் மக்கள் புகார்களுக்கு தீர்வுகாண ஆளுநர் மாளிகையில் முதல்முறையாக ‘அமைதி இல்லம்’ திறக்கப்பட்டிருந்தது. வன்முறை காரணமாக நேற்று பிற்பகல் ஒரு மணி வரை 36.66 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின.

குடியரசுத் தலைவர் ஆட்சி: வன்முறை குறித்து மேற்கு வங்க எதிர்க் கட்சித் தலைவரும், பாஜக மூத்த தலைவருமான சுவேந்து அதிகாரி கூறியதாவது: மேற்கு வங்கத்தில் காட்டாட்சி நடைபெறுகிறது. முதல்வர் மம்தா பானர்ஜி, அவரது நெருங்கிய உறவினர் ஆகியோர், மாநில போலீஸாருடன் இணைந்து நடத்தும் செயல்களால் மேற்கு வங்கம் கலவர பூமியாக மாறியுள்ளது.

எனவே, இங்கு குடியரசுத் தலை வர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 355-வது சட்டப் பிரிவை அமல்படுத்துவது முக்கியம். மேற்கு வங்கத்துக்கு அழைத்து வரப்பட்ட மத்தியப் படைகள், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை.

உண்மையில் இது தேர்தல் அல்ல, கொள்ளை. திரிணமூல் காங்கிரஸ் குண்டர்கள், மாநில போலீஸாருடன் இணைந்து கலவரத்தில் ஈடுபட்டுள்ளதால், இத்தனை பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு சுவேந்து அதிகாரி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்