ஒடிசா ரயில் விபத்து | 3 ரயில்வே ஊழியர்கள் கைது - சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

புவனேஸ்வர்: ஒடிசாவில் 295 பயணிகள் உயிரிழக்க காரணமான ரயில் விபத்துதொடர்பாக, பணியில் அலட்சியமாக இருந்த மூத்த பொறியாளர் உட்பட 3 ரயில்வே ஊழியர்களை சிபிஐ கைது செய்துள்ளது.

கடந்த ஜூன் 2-ம் தேதி ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பாஹாநகா பஜார் பகுதியில் தண்டவாளத்தில் நின்றிருந்த சரக்கு ரயில் மீதுஷாலிமர் - சென்னை கோரமண்டல் விரைவு ரயில் மோதியது. அப்போது, எதிர் திசையில் வந்த பெங்களூரு - ஹவுரா அதிவிரைவு ரயிலின் கடைசி பெட்டிகளும் விபத்தில் சிக்கி தடம்புரண்டன. இந்த கோர விபத்தில் 295 பேர் உயிரிழந்தனர். 1,100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை நடத்தி, 40 பக்க அறிக்கையை சமீபத்தில் ரயில்வே அமைச்சகத்திடம் சமர்ப்பித்தார். அதில், ‘மனித தவறுகளால் விபத்து நேரிட்டுள்ளது. தவறான வயரிங், கேபிள்இணைப்பால் தவறான சிக்னல் கிடைத்து, ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. ரயில்வேயின் சிக்னல் மற்றும் தொலைதொடர்பு பிரிவுதான் விபத்துக்கு பொறுப்பு’ என்று சுட்டிக் காட்டப்பட்டது.

இதுதொடர்பாக சிபிஐயும் தனியாக விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில், ரயில்வே மூத்த பொறியாளர் அருண் குமார்மகந்தோ, பகுதி பொறியாளர் முகமது அமீர் கான், தொழில்நுட்பஊழியர் பப்பு குமார் ஆகிய 3 பேரைசிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். குற்றவியல் சட்டம் 304, 201 ஆகிய பிரிவுகளின்கீழ் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து ரயில்வே வட்டாரங்கள் கூறியதாவது: மனித தவறால் ரயில் விபத்துநடந்துள்ளதாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சமீபத்தில் அறிக்கை அளித்தார். சிபிஐ விசாரணையிலும் இது உறுதி செய்யப்பட்டு உள்ளது. தவறிழைத்த, பணியில் அலட்சியமாக இருந்த 3ரயில்வே ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரயில்வே கேட் 94-ல் உள்ள பாயின்டில் ஏற்பட்ட கோளாறால் கோரமண்டல் ரயிலுக்கு தவறான சிக்னல் கிடைத்து, பிரதான தண்டவாளத்தில் இருந்து இணைப்பு தண்டவாளத்துக்கு மாறியுள்ளது. அங்கு ஏற்கெனவே நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது கோரமண்டல் ரயில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட பாயின்டில், 14 விநாடிகளில் சிக்னல் ‘ரிவர்ஸுக்கு’ மாற வேண்டும். ஆனால் விபத்து நடந்த நாளில் 37 விநாடிகள் வரை ஆகியுள்ளது. இதை ரயில்வே ஊழியர்கள் கவனிக்கவில்லை.

தவறான சிக்னல் குறித்து பாஹாநகா பஜார் ரயில் நிலைய சிக்னல், தொலைதொடர்பு துறையின் பேனலில் காட்டப்பட்டுள்ளது. ஊழியர்கள் கவனத்துடன் இருந்திருந்தால் விபத்தை தடுத்திருக்கலாம். எதிர்காலத்தில் இதுபோல விபத்துகள் ஏற்படாமல் இருக்க, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் பல்வேறு அறிவுரைகளை வழங்கிஉள்ளார்.

சிக்னல் அமைக்கும்போது வழிகாட்டு நெறிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். எந்தெந்தவகையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படும். அதை எப்படிகண்டுபிடிக்க வேண்டும் என ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கண்டிப்புடன் கூறியுள்ளார். இவ்வாறு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிணவறையில் 52 உடல்கள்: விபத்தில் இதுவரை அடையாளம் காண முடியாத 52 உடல்கள், புவனேஸ்வரம் எய்ம்ஸ் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன. மரபணு சோதனைமுடிவுகளின் அடிப்படையில் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படும் என்று ஒடிசா அரசுவட்டாரங்கள் கூறியுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE