பொது சிவில் சட்டம் அமலாக்க 4 அமைச்சர்களுக்கு பொறுப்பு - பிற சமூகத்தினருடன் இணைந்து போராட சீக்கியர்கள் திட்டம்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: பொது சிவில் சட்டத்தை அமலுக்கு கொண்டு வர 4 மத்திய அமைச்சர்களுக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில்,பொது சிவில் சட்டத்திற்கு எதிராக சிறுபான்மையினர் மற்றும் பழங்குடிகளுடன் இணைந்து போராட சீக்கியர்கள் திட்டமிடுகின்றனர்.

சிறுபான்மையினர் இடையே நிலவும் எதிர்ப்பை மீறி மத்திய அரசு பொது சிவில் சட்டம் கொண்டுவர முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான மத்திய அரசின் நடவடிக்கையாக, 4 அமைச்சர்கள் கொண்ட குழுவுக்கு முக்கியப் பொறுப்புகள் அளிக்கப்பட் டுள்ளன.

மத்திய புவி அறிவியல் துறை அமைச்சரான கிரண் ரிஜிஜுவுக்கு பழங்குடிகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சரான ஸ்மிருதி இரானியிடம் மகளிர் நலனும், சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டியிடம் வடகிழக்கு பகுதிகளை எதிர்கொள்ளும் பொறுப்பும் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய சட்டத்துறை அமைச்சரான அர்ஜுன் ராம் மெக்வாலுக்கு சட்டப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் மத்திய அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், “பொது சிவில் சட்டத்தை அமலாக்க மத்திய அரசு எடுத்த முதல் தீவிர நடவடிக்கையாக இது உள்ளது. இந்த அமைச்சர்கள் குழு தனது முதல்கூட்டத்தை வட கிழக்கு மாநிலங்களுக்காக நடத்தி முடித்துள்ளது. வரும் ஜுலை 20-ல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்கும் மழைக்காலக் கூட்டத்தொடரில் முதல் மசோதாவாக அறிமுகமாகி பொது சிவில் சட்டம் வரலாறு படைக்க உள்ளது” என்று தெரிவித்தனர்.

சீக்கியர்கள் எதிர்ப்பு: இதனிடையே, சிறுபான்மையினரான சீக்கிய சமூகத்தினர் பொது சிவில் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாடு சுதந்திரம் அடைந்து 75 வருடங்களுக்கு மேலான பிறகும் தங்கள் மதத்திற்காக ஒரு தனிச்சட்ட வாரியம் அமைக்காமல் இருப்பதாகக் கருதுகின்றனர். அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தை போல் சீக்கியர்களுக்காகவும் அமைக்க ஒரு குழு அமைத்து ஆலோசித்து வருகின்றனர்.

இச்சூழலில், சிரோமணி அகாலி தளம் நிர்வாகிகள் டெல்லியில் கூடி, பொது சிவில் சட்டம் அமலானால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என மத்திய அரசை எச்சரித்துள்ளனர். இதன் காரணமாக, ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாப் மாநில முதல்வர் பக்வந்த் மான் தனது நிலையை மாற்றி, பொது சிவில் சட்டத்தை எதிர்க்கத் தொடங்கியுள்ளார்.

இதற்கு முன்பாக, வட கிழக்குமாநில பழங்குடிகள் சார்பிலும் பொது சிவில் சட்டத்தை ஏற்க மறுத்துள்ளனர். அதேபோல், தொடக்கத்தில் சில மாற்றங்களுடன் பொது சிவில் சட்டத்தை ஏற்கத் தயாராக இருந்த முஸ்லிம்களும் தற்போது எதிர்க்கத் தொடங்கியுள்ளனர். இதன் பின்னணியில் இரண்டு தினங்களுக்கு முன் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தினர் கூடி ஆலோசித்தது காரணமாகி உள்ளது. இதன் சார்பில் பொது சிவில் சட்டத்தை ஏற்க முடியாது எனக் குறிப்பிட்டு தேசிய சட்ட ஆணையத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

கிறிஸ்தவர்களும் எதிர்ப்பு: கிறிஸ்தவர்களின் பெரும்பாலானப் பிரிவுகளும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யத் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் முஸ்லிம், கிறிஸ்தவர் உள்ளிட்ட சிறுபான்மையினர் மற்றும் பழங்குடிகளுடன் இணைந்து ஒரு கூட்டம் நடத்த சீக்கியர்கள் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. இதில் அனைவரும் ஒன்றாக இணைந்து பொதுசிவில் சட்டத்தை எதிர்க்கவும் போராட்டம் நடத்தவும் திட்டமிடப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE