அரிசி கொம்பன் யானை குறித்த தொடர் பொது நல மனுக்களால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கோபம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அரிசி கொம்பன் யானை குறித்த தொடர் பொது நல மனுக்களால் கோபம் அடைந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட், தனது பொறுமையை சோதிக்க வேண்டாம் என வழக்கறிஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

கேரள வனப் பகுதியில் இருந்துஅரிசி கொம்பன் என்ற யானை, தமிழகத்தின் தேனி மாவட்டத்துக்குள் புகுந்தது. இந்த யானை, கும்கி யானைகள் உதவியுடன் பிடிக்கப்பட்டு நெல்லை வனப் பகுதிக்குள் கொண்டுவிடப்பட்டது. இந்த யானையின் நடமாட்டம் தொடர்ந்து ரேடியோ காலர் கருவி மூலம் கண்காணிக்கப்படுகிறது.

இந்நிலையில் விலங்குகளுக்கான தொண்டு நிறுவனம் சார்பில் தீபக் பிரகாஷ் என்ற வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனுவை தாக்கல் செய்தார். அதில் அரிசி கொம்பன் யானையை மீண்டும் கேரள வனப்பகுதிக்கு கொண்டு வர உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் நீதி பதிகள் நரசிம்மா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர் வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இப்பிரச்சினைக்கு தீர்வு காண கேரளா அல்லது சென்னை உயர் நீதிமன்றத்தை நாடும்படி நீதிபதிகள் கூறினர்.

வலியுறுத்தல்: அப்போது வழக்கறிஞர் தீபக் பிரகாஷ், அரிசி கொம்பன் யானை பற்றிய செய்திக்காக லட்சக்கணக்கான மக்கள் காத்துக்கொண்டிருப்பதால், அதன் இருப்பிடத்தை கண்டறிய கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்.

எச்சரிக்கை: இதனால் கோபம் அடைந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி,‘‘நீதிமன்றத்தில் இஷ்டத்துக்கு மனுத்தாக்கல் செய்ய முயற்சிக்க வேண்டாம். நான் மென்மையாக நடந்துகொள்வதால், அதை சாதகமாக பயன்படுத்த முயற்சிக்காதீர். நீங்கள் நியாயமின்றி செயல்பட்டால், நானும் கோபப்பட வேண்டியிருக்கும். எனது பொறுமையை சோதிக்கவேண்டாம்’’ என எச்சரித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE