மேகேதாட்டு வாக்குறுதி முதல் மதுபானம் மீதான கலால் வரி வரை: கர்நாடகா பட்ஜெட் 2023 முக்கிய அம்சங்கள்

By செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தின் பட்ஜெட்டை முதல்வர் சித்தராமையா இன்று (ஜூலை 7) தாக்கல் செய்தார். கர்நாடக முதல்வர் சித்தராமையா இந்த பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்யும்போது வணிகத் துறையிலிருந்து 1,01,000 கோடி ரூபாய், கலால் துறையிலிருந்து 36,000 கோடி ரூபாய், முத்திரைகள் மற்றும் பதிவுத் துறையிலிருந்து 25,000 கோடி ரூபாய் என மூன்று துறைகளில் இருந்து மொத்தம் 1,62,000 கோடி ரூபாய் அளவிலான வருவாயை ஈட்ட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அனைவருக்கும் சம வாய்ப்பு, அனைவருக்கும் சம பங்கு என்ற கொள்கையுடன் தான் பட்ஜெட்டை வகுத்துள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

ரூ.52,000 ஒதுக்கீடு: 200 யூனிட் மின்சாரம் இலவசம், மகளிருக்கு மாதம் ரூ.2000, 10 கிலோ இலவச அரிசி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.3,000, டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.1500 உதவித்தொகை, அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட ஐந்து திட்டங்களை செயல்படுத்த ரூ.52,000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்தத் திட்டங்கள் மூலம் 1.3 கோடி குடும்பங்கள் பயனடையும் என்றும் கூறினார்.

மேகேதாட்டு அணை: பட்ஜெட் உரையில் சித்தராமையா விரைவில் மேகேதாட்டு அணை கட்ட மத்திய அரசின் அனுமதியைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார். மேலும், மேகேதாட்டு அணை திட்டம் தொடர்பாக அனுமதி கோரி மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. அணை கட்ட தேவையான நிலங்களை அரசு கையகப்படுத்த நடவடிக்கை முதன்மையாக செயல்படுத்தப்படும். அணைக்கான சுற்றுசூழல் அனுமதி பெறுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று கூறினார்.

மேகேதாட்டு அணை கட்ட தமிழக அரசு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துவரும் நிலையில், சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசின் முதல் பட்ஜெட்டிலேயே அணைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கர்நாடக பட்ஜெட் 2023 முக்கிய அம்சங்கள்: > உள்நாட்டுத் தயாரிப்பு மதுபான வகைகளின் மீதான கலால் வரியை 20 சதவீதமும், பியர் மீதான கலால் வரியை 5.71 சதவீதமும் அதிகரித்துள்ளதாக அறிவித்தார்.

மீண்டும் இந்திரா கேன்டீன்: ரூ.100 கோடி முதலீட்டில் மீண்டும் மாநிலம் முழுவதும் இந்திரா கேன்டீன்கள் செயல்படுத்தப்படும்.

ஊட்டச்சத்து திட்டத்துக்கு ரூ.280 கோடி: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு முட்டைகள், கடலை மிட்டாய், வாழைப்பழம் வழங்கும் திட்டம் இனி 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் நீட்டிக்கப்படும் என்றும், இதற்காக ரூ.280 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பெங்களூரு போக்குவரத்து நெரிசலை சமாளிக்க... - பெங்களூரு போக்குவரத்து நெரிசலை சமாளிக்க நகரில் 5 போக்குவரத்து காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும், மாநகரில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய பிரத்யேகமாக 5 மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். அதேபோல் மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கை பேண காவல் துறையில் புதிதாக 2,454 புதிய பதவிகள் உருவாக்கப்படும் என்றார்.

தனது உரையில் சித்தராமையா தேசிய கல்விக் கொள்கையை சாடினார். மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ளும் வகையில் அந்தக் கல்வித் திட்டம் இல்லை என்று கூறிய அவர், தேசிய கல்விக் கொள்கையானது அரசில் சாசனத்துக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரானது என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE