“சத்தீஸ்கர் வளர்ச்சிக்கு தடைச் சுவராக இருப்பது காங்கிரஸ்தான்!” - பிரதமர் மோடி தாக்கு

By செய்திப்பிரிவு

ராய்பூர்: "சத்தீஸ்கர் மாநில வளர்ச்சிக்கு முன்னால் பனைமரம் போன்ற ஒரு தடைச் சுவர் உள்ளது. உங்களிடமிருந்து உங்கள் உரிமைகளைப் பறிக்கும் காங்கிரஸ் கட்சியே அந்தத் தடைச் சுவர்" என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்பூரில் ரூ.7,600 கோடி மதிப்பிலான 8 திட்டங்களுக்கு பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினார். ராய்பூரில் நடந்த விஜய் சங்கல்ப் பேரணியில் உரையற்றிய பிரதமர் மோடி, "சத்தீஸ்கரின் வளர்ச்சி பயணத்தில் இன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள். இந்த மாநிலம் இன்று ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களைப் பரிசாக பெற்றுள்ளது. இது உள்கட்டமைப்பு, இணைப்பு வசதி மற்றும் மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும்.

இயற்கை வளங்கள் அதிகமிருக்கும் பகுதிகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. அரசின் நடவடிக்கைகள் சத்திஸ்கரில் தொழில்மயமாக்கலை வலுப்படுத்தியுள்ளது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால் சத்தீஸ்கரில் 20 சதவீதத்துக்கு அதிகமான கிராமங்களுக்கு எந்தவிதமான மொபைல் இணைப்புகளும் இல்லை. இப்போது அது 6 சதவீதமாக குறைந்துள்ளது" என்றார்.

காங்கிஸ் மீது தாக்கு: தனது பேச்சில் காங்கிரஸ் கட்சியின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை பிரதமர் மோடி முன்வைத்தார். அவர் கூறுகையில், "சத்தீஸ்கர் காங்கிரஸ் கட்சியின் ஏடிஎம் ஆக மாறியுள்ளது. ஊழல் என்பது மதுவில் மட்டும் இல்லை; சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் நடக்காத துறைகளே இல்லை. முறையற்ற ஆட்சிக்கு
இந்த அரசு ஒரு முன்மாதிரியாக உருவாகியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தின் வளர்ச்சியின் முன்னால் பனை போல ஒரு தடைச் சுவர் உள்ளது. உங்களிடமிருந்து உங்கள் உரிமைகளைப் பறிக்கும் காங்கிரஸ் கட்சியே அந்தத் தடைச் சுவர். அந்த தடைச் சுவர் சத்தீஸ்கரை கொள்ளையடித்து நாசமாக்க முடிவு செய்துள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான காற்று வீசுகிறது" என்று பிரதமர் மோடி கூறினார்.

விபத்தும் அஞ்சலியும்: ராய்பூர் பேரணி நடக்கும் இடத்துக்கு அருகில் நடந்த விபத்து குறித்து வருத்தம் தெரிவித்த பிரதமர் மோடி, "இன்று காலையில் இந்தப் பேரணியில் கலந்து கொள்வதற்காக வந்த மூன்று பேர் பேருந்து விபத்தில் உயிரிழந்ததாக கேள்விப்பட்டேன். விபத்தில் சிலர் காயமடைந்ததாகவும் அறிகிறேன். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவர்கள் விரைவாக குணமடைய விழைகிறேன்" என்று பிரதமர் தெரிவித்தார்.

பேரணி நடைபெறும் இடத்துக்கு அருகில் பேரணியில் பேருந்து ஒன்று சாலையில் நின்று கொண்டிருந்த டிரக்கின் மீது மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மாநில முதல்வர் பூபேஸ் பாகல், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் கருணைத்தொகை அறிவித்துள்ளார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு பின்னர் காங்கிரஸ் ஆளும் மாநிலம் ஒன்றுக்கு பிரதமர் மோடி செல்வது இதுவே முதல்முறை. சத்தீஸ்கர் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக ராய்பூர் வந்த பிரதமர் மோடியை மாநில ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிசந்தன் மற்றும் முதல்வர் பூபேஸ் பாகல் விமான நிலையம் சென்று வரவேற்றனர்.

இரண்டுநாள் பயணம்: ராய்பூர் நிகழ்வினைத் தொடர்ந்து பிரதமர் மோடி உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் செல்கிறார். அங்கு கோரக்பூர் கீதா பிரஸ் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்துகொள்ளும் பிரதமர், அதனைத் தொடர்ந்து கோரக்பூர் ரயில் நிலையத்தில் இரண்டு வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைக்கிறார். அங்கிருந்து வாரணாசி செல்லும் பிரதமர் மோடி அங்கு பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்றும் நாளையும் (ஜூலை 7, 8) ரூ.50,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், நாட்டுக்கு அர்ப்பணிக்கவும் சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE