பொது சிவில் சட்டம்: முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் எதிர்ப்பு, சீக்கியர்கள் எச்சரிக்கை

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: மத்திய அரசு அமலாக்க முயற்சிக்கும் பொது சிவில் சட்டத்திற்கு அகில இந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியம்(ஏஐஎம்பிஎல்பி) எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மற்றொரு சிறுபான்மையினரான சீக்கியர்கள் மத்திய அரசிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மத்தியில் தலைமை ஏற்று ஆட்சி செய்யும் பாஜகவின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாக மீதம் இருப்பது பொது சிவில் சட்டம். இதை நிறைவேற்றி அடுத்த வருடம் மக்களவை தேர்தலில் அரசியல் லாபம் பெற முயற்சிக்கப்படுகிறது. இதற்கு சிறுபான்மையினரும், பெரும்பான்மையான எதிர்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பொது சிவில் சட்டம் அமலாக்க வேண்டி தேசிய சட்ட ஆணையம் சார்பில் பொதுமக்கள் மற்றும் சம்மந்தப்பட்டவர்களிடம் கருத்துக்கள் கேட்டு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்த கால அவகாசம் போதாது எனவும் இதை மேலும் ஆறு மாத காலம் நீட்டிக்க வேண்டும் என்றும் ஏஐஎம்பிஎல்பி சட்ட ஆணையத்திடம் கோரியிருந்தது. இச்சூழலில் திடீர் என ஏஐஎம்பிஎல்பி நிர்வாகிகள் நேற்று முன்தினம் உத்தரப்பிரதேசம் லக்னோவில் கூடி ஆலோசித்தனர். இதில், எடுத்த முடிவின்படி பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய சட்ட ஆணையத்திற்கு ஏஐஎம்பிஎல்பி கடிதம் எழுதியுள்ளது.

சுமார் 3 மணி நேரம் நடந்த ஆலோசனைக்கு பின் தேசிய சட்ட ஆணையத்திற்கு எழுதப்பட்ட கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: ''நாட்டின் பெரும்பான்மை சமுதாயமானது சிறுபான்மையினரின் தனிச்சட்டம், மதச் சுதந்திரம் மற்றும் தனி உரிமை ஆகியவற்றில் தலையிடுவது ஒழுக்கமாகாது. பொது சிவில் சட்டம் மீது கருத்து கேட்டு சட்ட ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு தெளிவு இன்றி மேலோட்டமாக உள்ளது. சட்டத்திற்கு உட்பட்டதை பிரச்சினையாக்கி தம் அரசியலுக்கு ஆதாயம் தேட மத்திய அரசு முயல்கிறது. கடந்த 21 ஆவது சட்ட ஆணையம், பொது சிவில் சட்டமானது அவசியமானதல்ல, உகந்ததும் அல்ல எனத் தீர்மானித்திருந்தது. இந்த நிலையில், மிகக்குறைந்த அவகாசம் அளித்து பொது சிவில் சட்டத்தை அமலாக்கும் முயற்சி என்பது உள்நோக்கம் கொண்டதாகத் தெரிகிறது. முஸ்லிம்களின் தனிப்பட்ட உறவுகளுக்கு வழிகாட்டியாக அவர்களது தனிச்சட்டம் உள்ளது.

இது நம் புனிதக் குர்ஆன் மற்றும் இஸ்லாமியச் சட்டங்கள் கொண்ட ஒரு அடையாளமாக விளங்குகிறது. நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் அளிக்கப்பட்ட அனுமதியின்படி பின்பற்றும் தம் அடையாளத்தை முஸ்லிம்கள் இழக்கத் தயாராக இல்லை. பன்முகத்தன்மை கொண்ட நம் நாட்டில் தேசிய பாதுகாப்பு, மதநல்லிணக்கம், சகோதரத்துவம் போன்றவற்றை பேண சிறுபான்மையினர் மற்றும் பழங்குடிகளுக்கு அவர்களது தனிச்சட்டங்கள் உதவுகின்றன. எனவே, பொது சிவில் சட்டம் நம் நாட்டிற்கு தேவையில்லாத ஒன்று." இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, பொது சிவில் சட்டம் மீதான அறிவிப்பின் துவக்கத்திலேயே சீக்கியர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இவர்களது ஒரு அரசியல் கட்சியான சிரோமணி அகாலி தளம் நிர்வாகிகள், டெல்லியில் கூடி ஆலோசித்தனர். இதன் முடிவுகளின்படி, பொது சிவில் சட்டம் நாட்டை இரண்டாகப் பிளந்து விடும் எனக் கூறி மத்திய அரசை எச்சரித்துள்ளனர்.

சீக்கியர்கள் எச்சரிக்கை: இது குறித்து எஸ்ஏடியின் தலைவரான பரம்ஜித்சிங் சர்னா கூறும்போது, ''சீக்கிய சமுதாயத்திற்கு எதிரானது என்பதால் பொது சிவில் சட்டத்தை ஏற்க முடியாது. இது, சிறுபான்மையினரை பெரும்பான்மையினரான இந்துக்களுடன் ஒருங்கிணைக்கும் முயற்சி. இதை அமலாக்க முயன்றால் நம் நாட்டின் மதநல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்கு கேடு ஏற்படும். இதுபோன்ற சட்டத்தை முதலில் இந்துக்கள் இடையே அரசு அமலாக்க வேண்டும். ஏனெனில், இந்துக்களின் அனைத்து பிரிவுகளுக்கும் ஒரே வகையான சட்டம் கிடையாது. சீக்கியம் என்பது தனி மதம். அதற்கு வேதங்களின் நம்பிக்கை கொண்ட இந்துக்களுடன் எந்த சம்மந்தமும் இல்லை. இதனால் அதை அமலாக்க முயற்சித்தால் மத்திய அரசு கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்.'' எனத் தெரிவித்தார்.

இப்பிரச்சினையில் எஸ்ஏடி, இதர சிறுபான்மை சமூகத்துடன் இணைந்து ஆலோசனை செய்ய உள்ளது. இச்சட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி அளித்துள்ள ஆதரவு குறித்த கேள்விக்கு எஸ்ஏடி தலைவர்கள், ''அது பாஜகவின் பி பிரிவு'' எனப் பதிலளித்தனர். இந்த பதிலால், ஆம் ஆத்மி கட்சி ஆளும் பஞ்சாப் முதல்வரான பக்வந்த் மான், பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறத் துவங்கி உள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்