அதி கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: கேரளா, கடலோர கர்நாடகா, கோவாவுக்கு ரெட் அலர்ட்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கேரளா, கடலோர கர்நாடகா மற்றும் கோவாவுக்கு இன்று (ஜூலை 6) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையிலான அலர்ட் இது. இம்மூன்று மாநிலங்களிலும் அதி கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவைப் பொறுத்தவரை மாநிலத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. ஒரு சில பகுதிகளில் ஆரஞ்சு அலர்ட்டும், ஒரு சில பகுதிகளில் ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் 11 மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களாகத் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக பல்வேறு ஆறுகளும் கரைபுரண்டோடுகின்றன.

கோவாவுக்கும் ரெட் அலர்ட்: கோவா மாநிலத்துக்கும் இன்று நாள் முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்கள் மட்டுமல்லாது உள் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் கடல்நீர் உட்புகுதல், மரங்கள் முறிந்து விழுதல் போன்ற சம்பவங்களுக்கு வாய்ப்புள்ளதாக மாநில அரசு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதி கனமழையின்போது சாலைகளில் எதிர்வரும் வாகனங்கள் தெரிவதில் சிக்கல் இருக்கும் என்றும், அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தில் குறுகிய கால தடை இருக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.

கர்நாடகாவில் இருவர் பலி: கர்நாடகா மாநிலத்தில் கனமழை காரணமாக இதுவரை இருவர் உயிரிழந்துள்ளனர். ஜூலை 4 மற்றும் 5 தேதிகளில் இந்த உயிரிழப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன. தக்‌ஷின கன்னடாவில் கனமழை காரணமாக இன்று வரை பள்ளிகள் மற்றும் பியுசி கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன. மும்பையில் நேற்றிரவு முழுவதும் மழை கொட்டித் தீர்த்தது. அதனால் இன்று கனமழை தொடரும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது.

பெங்களூருவில் இன்றும், நாளையும் பலத்த காற்று வீசும்: பெங்களூருவுல் இன்றும் (ஜூலை 6) மற்றும் நாளையும் பலத்த காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தெற்கு உள் பகுதிகள், வடக்கு உள் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பருவமழை காலத்தில் பலத்த காற்று இயல்பானதே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், இன்று தொடங்கி அடுத்த ஐந்து நாட்களுக்கு பெங்களூருவில் பலத்த காற்று வீசும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்துக்கு ஜூலை 10 வரை எச்சரிக்கை: உத்தராகண்ட் மாநிலத்தில் இன்று (ஜூலை 6) தொடங்கி வரும் 10 ஆம் தேதி வரை மழை, ஆங்காங்கே வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.

குஜராத்தில் ஐந்து நாட்களுக்கு மழை வாய்ப்பு: அடுத்த ஐந்து நாட்களுக்கு குஜராத்தில் மழைக்கு பரவலாக வாய்ப்புள்ளதாக அகமதாபாத் வானிலை மைய இயக்குநர் மனோரமா மொஹாந்தி தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் பரவலாக மழை இருக்கும். சில இடங்களில் கனமழை முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக சவுராஷ்டிரா கச் பகுதியில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும், அகமதாபாத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

பிஹாரில் மின்னல் தாக்கி 15 பேர் பலி: கனமழை ஒருபுறம் மக்களின் இயல்பு நிலையைப் புரட்டிப்போட, இன்னொரு புறம் பிஹாரில் மின்னல் தாக்கி பலர் உயிரிழந்தனர். மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையை முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்தார். செவ்வாய்க்கிழமைக்குப் பின்னர் கடந்த 36 மணி நேரத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.

முன்கூட்டியே வந்த தென்மேற்கு பருவமழை: கடந்த 2-ஆம் தேதி (ஜூலை 2) இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை ஒருவாரத்துக்கு முன்னதாகவே வந்துவிட்டதாகத் தெரிவித்தது. மேலும், ஜூலை மாதத்தில் பருவ மழை இயல்பான அளவிலேயே இருக்கும். உத்தரப் பிரதேசம், பிஹார் மட்டும் இதற்கு விதிவிலக்கு என்று கூறியிருந்தது இங்கே நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE