ம.பி. வன்கொடுமை சம்பவம் | பழங்குடியின இளைஞரின் பாதங்களைக் கழுவிய முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்

By செய்திப்பிரிவு

இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் பழங்குடியின தொழிலாளி ஒருவர் மீது சிறுநீர் கழிக்கப்பட்டு வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட வீடியோ வைரலான நிலையில், பாதிக்கப்பட்ட நபரின் பாதங்களைக் கழுவியதோடு தனது வருத்தங்களையும் தெரிவித்துள்ளார் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்.

முன்னதாக, நடந்த சம்பவம் தொடர்பாக நேற்றிரவு முதல்வர் பதிவு செய்த ட்வீட் ஒன்றில், "சித்தி சம்பவம் தொடர்பான வீடியோவைப் பார்த்ததில் இருந்து என் மனம் ஆழமாகப் பாதிகப்பட்டுள்ளது. நான் மிகுந்த வேதனையில் உள்ளேன். நான் தஸ்மத்தை நேரில் பார்த்து அவர் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அவரை நேரில் சந்தித்து அவருக்கு நீதி கிடைக்கச் செய்வேன் என்று உறுதியளிக்க விரும்புகிறேன். நான் நாளை போபாலில் அவரையும் அவரது குடும்பத்தாரையும் நேரில் சந்தித்து எனது ஆறுதலைத் தெரிவிப்பேன்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று சிவ்ராஜ் சிங் சவுகான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த வீடியோவில், அவர் தஸ்மத்தின் பாதகங்களைக் கழுவி பூஜை செய்யும் காட்சி இடம் பெற்றிருந்தது. அதில் பாதிக்கப்பட்ட தொழிலாளியை ஒரு நாற்காலியில் அமரவைத்து அவரது பாதங்களைக் கழுவி அந்தத் தண்ணீரை தனது தலையில் தீர்த்தம் போல் தடவிக் கொள்கிறார் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்.

அந்த வீடியோவைப் பகிர்ந்த முதல்வர், "இந்த வீடியோவை நான் உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன். பொதுமக்கள் தான் கடவுள் என்பதை அனைவருக்கும் உணர்த்தவே இதனைப் பகிர்கிறேன். மக்களுக்கு எதிரான எவ்வித கொடுமைகளும் பொறுத்துக் கொள்ளப்பட மாட்டாது. மாநிலத்தில் ஒவ்வொரு தனிநபருக்குமான மரியாதையில்தான் எனது மாண்பு அடங்கியிருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார். அதன்பின்னர் தஸ்மத்தை மரம் நடும் விழாவிலும் முதல்வர் ஈடுபடச் செய்தார். அந்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

நடந்தது என்ன? - மத்திய பிரதேசத்தில் ஒரு நபர் அலட்சியமாக சிகரெட் பிடித்தவாறு, பழங்குடியின இளைஞரின் முகத்தில் சிறுநீர் கழிக்கும் அதிர்ச்சி வீடியோ கடந்த செவ்வாய்க்கிழமை சமூக வலைதளங்களில் பரவியது. இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் ம.பி.யில் இது அரசியல் கொந்தளிப்பை தூண்டுவதாகவும் அமைந்தது.

இச்சம்பவம் தொடர்பாக பிரவேஷ் சுக்லா என்பவரை சித்தி மாவட்டத்தின் பஹ்ரி பகுதியில் உள்ள குப்ரி என்ற கிராமத்தில் போலீஸார் நேற்று அதிகாலையில் கைது செய்தனர். குற்றவாளி, பாதிக்கப்பட்ட இளைஞர்ஆகிய இருவரும் குப்ரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. பிரவேஷ் சுக்லா மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பாதிக்கப்பட்ட இளைஞர் எஸ்டி சமூகத்தை சேர்ந்தவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பிரவேஷ் சுக்லா, பாஜகவைச் சேர்ந்தவர் எனவும் சித்தி தொகுதி பாஜக எம்எல்ஏ கேதார்நாத் சுக்லாவின்பிரதிநிதி எனவும் சமூக வலைதள பயன்பாட்டாளர்கள், காங்கிரஸார் குற்றம் சாட்டினர். ஆனால் இதனை பாஜக எம்எல்ஏ கேதார்நாத் சுக்லா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் எனது பிரதிநிதி அல்ல. கட்சியில் அவர் எந்தப் பதவியும் வகிக்கவில்லை. அவர் கட்சியின் உறுப்பினர் கூட அல்ல. நான் மக்கள் பிரதிநிதியாக இருப்பதால் எவரும் என்னுடன் புகைப்படம் எடுத்திருக்கலாம்” என்றார்.

அதேநேரத்தில், ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தனது ட்விட்டர் பதிவில் “குற்றவாளியை கைது செய்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார். பிரவேஷ் சுக்லா மீது தேசிய பாதுகாப்பு சட்டம், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, சட்டவிரோத ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான நடவடிக்கையின் கீழ் பிரவேஷ் சுக்லாவுக்கு சொந்தமான கட்டிடத்தை அதிகாரிகள் நேற்று பொக்லைன் மூலம் இடித்து தள்ளினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE