என்சிபி விவகாரம்: பாகுபலி போஸ்டரும்; கபில் சிபலின் ‘அதிகாரத்தின் ரொட்டி துண்டு’ கருத்தும்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: "மகாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் ஜனநாயகம் இல்லை, அது தமாஷ்" என்று மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். மேலும் சட்டம் அதை அனுமதிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் சரத் பவார். இவரது அண்ணன் மகனும், எதிர்க்கட்சித் தலைவருமான அஜித் பவார், 8 தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிர பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்தார். இதையடுத்து, அஜித் பவார் துணை முதல்வராகவும், 8 எம்எல்ஏ-க்கள் அமைச்சர்களாகவும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து கட்சி எம்எல்ஏக்களில் யாருக்கு அதிக செல்வாக்கு என்பதை தீர்மானிக்க சரத் பவார் மற்றும் அஜித் பவார் இருவரும் தனித்தனியாக புதன்கிழமை போட்டிக் கூட்டம் நடத்தினர். அஜித் பவார் நடத்திய கூட்டத்தில் 29 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். சரத் பவார் கூட்டிய கூட்டத்தில் 13 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். ஒரு சில எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

கபில் சிபல் ட்வீட்: மகாராஷ்டிராவில் நடக்கும் இந்த அரசியல் நிலைமைகளை முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் ‘தமாஷ்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மகாராஷ்டிர அரசியலில் நடப்பது ஜனநாயகம் அல்லை. அது ஒரு தமாஷ். சட்டம் அதை அனுமதிப்பது போல் தெரிகிறது. அவை அதிகாரத்தின் ரொட்டித்துண்டுகளைப் பற்றியது. மக்களைப் பற்றியது இல்லை" இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாகுபலி போஸ்டரும் சரத் பவார் கூட்டமும்: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத் பவார் தலைநகர் டெல்லியில் தேசிய செயற்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அதற்காக அவர் தனது மகளும் என்சிபி செயல்தலைவருமான சுப்ரியா சுலேவுடன் டெல்லி சென்றுள்ளார். அவரை வரவேற்கவும் ஆதரவளிக்கும் விதமாகவும் டெல்லியில் வைக்கப்பட்டுள்ள போஸ்டர்கள் கவனம் ஈர்த்துள்ளன. அதில் ராஷ்ட்ரவதி வித்யார்த்தி காங்கிரஸ், பாகுபலி படத்தில் அமரேந்திர பாகுபலியை கட்டப்பா முதுகில் குத்தும் காட்சியைச் சித்தரித்து அஜித் பவாரை விமர்சித்து போஸ்டர் வைத்துள்ளது. மேலும் "இது உண்மைக்கும் பொய்க்கும் நடக்கும் போர். ஒட்டு மொத்த நாடும் சரத் பவார் பக்கம் நிற்கிறது" என்றும், "இந்திய வரலாறு இதுபோன்ற துரோகிகளை ஒருபோதும் மன்னிக்காது" என்றும் போஸ்டர்கள் வைக்கக்கப்பட்டுள்ளன.

கூட்டம்: கடந்த 1999 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை சரத் பவார் தொடங்கிய நிலையில், 24 வயதுடைய அக்கட்சியில் இருந்து அவரது அண்ணன் மகனான அஜித் பவார் கடந்த 2 ஆம் தேதி கிளர்ச்சி செய்து பிரிந்து சென்றார். கட்சியில் பெரும்பான்மையான எம்எல்ஏக்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக கூறிய அவர், புதன்கிழமை கூட்டம் கூட்டி அதை மெய்ப்பிக்கவும் செய்தார். இருந்தும் மனம் தளராத சரத் பவார் வியாழக்கிழமை டெல்லியில் கட்சியின் செயற்குழுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார். மேலும், பாஜகவுடன் கூட்டணி வைத்த அனைத்து கட்சிகளும் அழிவைச் சந்தித்திருக்கின்றன என்று அஜித் பவாருக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிவசேனா (உத்தவ் தாக்ரே அணி)வின் இந்துத்துவாவிற்கும், பாஜகவின் இந்துத்துவாவிற்கும் வித்தியாசம் இருப்பதாக தெரிவித்துள்ள சரத் பவார், அஜித் பவார் அணி போஸ்டர்களில் தனது படத்தினை ஏன் பயன்படுத்துகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

வயது வெறும் எண் மட்டுமே: இதற்கிடையில்,"அரசியலில் பலரும் 75 வயதில் ஓய்வு பெற்று விடுகின்றனர். ஆனால், 83 வயதாகியும் ஏன் சரத் பவார் ஓய்வை விரும்பவில்லை. இளைய தலைமுறையினருக்கு வழிவிடுங்கள். நாங்கள் சொல்வது சரியென்றால் ஊக்குவிக்கவும். தவறென்றால் வழிநடத்தவும். நீங்கள் ராஜினாமா செய்துவிட்டு உங்கள் முடிவுகளை சுயமாக எடுங்கள். அதைவிடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு ஏற்படுத்திவிட்டதாக தன்னை சிலர் வில்லன் போல் சித்தரித்தால், அது அநீதி. நான் ஐந்து முறை துணை முதல்வராக இருந்துவிட்டேன். எனக்கும் முதல்வராக வேண்டும் என்று விருப்பம் இருக்கிறது" என்று அஜித் பவார் தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள அணில் தேஷ்முக்,"வயது என்பது வெறும் எண்கள் மட்டுமே, சரத் பவார் 83 வயதிலும் கர்ஜிக்கும் சிங்கம்" என்று தெரிவித்திருந்தார்.

ஏக்நாத் ஷிண்டே பதில்: ஒரு வருடம் மட்டுமே கடந்திருக்கும் பாஜக - சிவசேனா கூட்டணி ஆட்சியில் அஜித் பவார் தலைமையில் என்சிபி வந்து இணைந்திருப்பது சிவசேனா எம்எல்ஏகளுக்கு மத்தியில் சலனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தனது கட்சி சகாக்களுடன் பேசிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, "நான் இன்னும் முதல்வராகத்தான் இருக்கிறேன். மாநில அரசின் முழுக்கட்டுப்பாடும் என்னிடம்தான் இருக்கிறது. எனவே, கட்சியினர் யாரும் கவலைப்படவேண்டியது இல்லை. நான் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக யார் வதந்தி பரப்புகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அதை நான் பார்த்துக்கொள்கிறேன். அடுத்த ஆண்டே மாநிலத்தில் தேர்தல் நடந்தாலும் நான்தான் முதல்வர்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE