த்ரெட்ஸ் செயலி லோகோ | தமிழ், மலையாளம் எழுத்துக்களைப் போல் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து

By செய்திப்பிரிவு

த்ரெட்ஸ் செயலியின் இலச்சினை (லோகோ) தமிழின் 'கு' எழுத்து போல் இருப்பதாகவும், மலையாளத்தில் 'Thra' (த்ரெ) என்ற ஒலி கொண்ட எழுத்தின் சாயலில் இருப்பதாகவும் இந்தியாவில் நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

த்ரெட்ஸ் (Threads) என்பது பயனர்கள் எழுத்து (டெக்ஸ்ட்கள்) மூலம் கருத்தைப் பகிரும் சமூக வலைதளம். இதில் ஒருவர் 500 எழுத்துக்கள் வரை ஒரு பதிவில் எழுதலாம். இது ட்விட்டருக்கு மிகப்பெரிய சவாலாக ஏன் அச்சுறுத்தலாகக் கூட இருக்கும் என்று தொழில்நுட்ப நிபுணர்கள் கருதுகின்றனர். இதனை இன்ஸ்டாகிராம் கணக்கின் வாயிலாக ஒருவர் தொடங்கலாம். த்ரெட்ஸில் டெக்ஸ்ட்களே பிரதானம் என்றாலும் இதில் புகைப்படங்கள், ஷார்ட்ஸ், உயர் தர வீடியோக்களையும் பகிரலாம்.

எலான் மஸ்கின் ட்விட்டர் சமூக வலைதளம் பல்வேறு கெடுபிடிகள் காரணமாக பொலிவிழந்து வரும் சூழலில் மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராம் கணக்கின் வழியாக பயனர்கள் தொடங்கி பயன்படுத்த ஒரு புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. வாசிக்க: | Threads அறிமுகம் | 11 ஆண்டுகளுக்குப் பிறகு ட்வீட் செய்த மார்க் ஸூகர்பர்க்: வைரலாகும் ஸ்பைடர் மேன் மீம் |

த்ரெட்ஸ் எனப்படும் இந்தச் செயலி அறிமுகமான நிலையில் இந்தியாவிலும் அதைப் பலரும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது பற்றி ஆராய்ந்து வருகின்றனர். இந்நிலையில் அந்தச் செயலியின் இலச்சினை பற்றி நெட்டிசன்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். த்ரெட்ஸ் செயலியின் இலச்சினை (லோகோ) தமிழின் 'கு' எழுத்து போல் இருப்பதாகவும், மலையாளத்தில் 'Thra' (த்ரெ) என்ற ஒலி கொண்ட எழுத்தின் சாயலில் இருப்பதாகவும் இந்தியாவில் நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

படுக்கைவசத்தில் இருக்கும் அந்த எழுத்தை செங்குத்தாக நிறுத்தியதுபோல் த்ரெட்ஸ் லோகோ இலச்சினை இருப்பதாகக் கூறியுள்ளனர். த்ரெ - என்பதுதான் த்ரெட்ஸ் செயலியின் முதல் எழுத்தின் ஆங்கில உச்சரிப்பிலும் ஒலிப்பதாக சிலர் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE